சிவக்கூத்து./ஆர்க்கே

டமரூகம் கயிற்றாட்டதில்
டமடமக்கிறது.

காலிரண்டும் தாவித்தாவி
துடிதுடிக்கிறது.

பூதகணங்கள் ஒத்திசைவாய்
எக்காளமிட

ஊர்கூடி பேர்கூடி
உன்னதங்கள்
ஒரு சேர சமைந்துகிடக்கின்றன.

கேசக்கற்றை கருநாகக் கூட்டமாய்
அலை பாய்ந்திருக்க

இறைச்சிரசை
விட்டுவிடாமல் பற்றியபடி
துண்டு நிலா.

மத்தளங்கள் முழங்க
வரிசங்கம் ஒலியிசைக்க
நெடிதுயர்ந்த திண்தேகம்
காற்றுக்குப் போட்டியாய் என
ஆட்டமாய்
ஆடித் தீர்க்குது-
ராத்திரி முழுக்க.

நாட்டிய ரீங்காரமாய்
அத்தனை ஆட்டமும்
ஆனந்தமும் ஊர்த்துவமும்
கால் மாறி கால்மாறி
எம்முளமெலாம்
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டவராய்
ஆண்டுவரும்
அந்த சிவதாண்டவம்!

One Comment on “சிவக்கூத்து./ஆர்க்கே”

Comments are closed.