
மீன் தொட்டி
இரவு மணி பதினொன்று. உறக்கம் வரவில்லை. புதிய வீடு வாங்கும் யோசனை வந்து வந்து உறுத்திக்கொண்டிருந்தது. வீடு வாங்குவதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வாள். இருபது வருடங்களுக்கு மேலாக வாடகை வீடு தான். ஏழுமுறை வீடு மாற்றியாகி விட்டது. எல்லா வீடுகளுமே நெருக்கடியான வீடுகள் தான். தாராளமான வீடு அமைய அதிர்ஷடம் வேண்டும். வீட்டின் முகப்பு மூலையில் மீன் தொட்டியிருந்தால் ஐஸ்வர்யம் பெருகும். மீனும் நீரும் ஒத்திசைந்து இயங்குவது போல் ஒரு சுமுகமான சக்திப் பெருக்கு இல்லத்தில் நீடித்த வண்ணம் இருக்கும். இது ஒரு சீன வாஸ்து முறை என்று எங்கோப் படித்திருக்கிறேன். இக் கோட்பாடு எப்படியோ என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. அதிலிருந்து கண்ணாடிப் பேழையில் வண்ண வண்ண மீன்கள் வளர்க்க வேண்டுமென்ற ஒரு ஆசை என் நீண்ட நாள் கனவாக என்னுள் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. என் ஆசை என்னாடு மட்டுமே. ஏனெனில் அதற்கு வீட்டில் அனுமதியில்லை. காரணம் அதற்கான தோதான இடம் இல்லை. காலம் காலமாக சேர்த்த சாமான்கள் வீட்டின் எல்லா மூலைகளையும் அடைத்துக் கொண்டிருந்தன. வேறு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு டிவிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நெருக்கடியை நினைக்கும் போதெல்லாம் என் மாமா வீடு ஞாபகம் வரும். என் மாமா வீடு விசாலமான வீடு. மாமாவீட்டில் மீன் தொட்டி இருக்கிறது. ஆனால் அவர் அழகுக்காக வைத்திருக்கிறார். அவருக்கு இந்த சீன வாஸ்து மீதெல்லாம் நம்பிக்கையில்லை. நான் அங்கு செல்லும் பொழுதெல்லாம் அந்த அழகான வண்ண வண்ண மீன்கள் நீந்தி மகிழ்வதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். மீன்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொள்வதும், துரு துரு விழிகளில் சந்தித்துப் பேசிக்கொள்ளும் அழகையும் ரசித்திருப்பேன். இந்த மீன்கள் எப்படி ஐஸ்வர்யம் பெருக்கித் தரும்? அதனாலாவது பெருகட்டுமே! மீன் தொட்டியை சாக்கு வைத்தாவது ஒரு புதிய வீடு வாங்கும் ஆசை கை கூடட்டுமே. இன்றைய சூழலுக்கு சொந்தமாக ஒரு வீடு தேவைதான். ஆசை அசைபோட அசைபோடத்தான் திட்டம் உருவாகும். திட்டங்களை மீன்கள் வகுத்துக் கொடுக்கும். இன்று பேழையில் நீந்தும் மீன் நாளை கடலில் நீந்தும் என்ற நம்பிக்கையில் உறங்கிப் போனேன்.
” ஏழு கடல்களும் பொங்கி எழுந்தன. பிரளயம் பிரவகித்தது. பெருஞ்சீற்ற வெள்ளத்தில் பூமண்டலம் மேல்கீழ் ஆனது. இயற்கை ஸ்தம்பித்து மண்மண்டலத்தின் ஸ்வாசம் நீரின் பிடியில் சிக்கிக்கொண்டது. காற்று அடிப்பது நின்றுவிட்டது. அக்னி ஆகாயத்தில் ஒடுங்கியது. ஒரு யானையின் தந்தத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பருமனான கொம்புடன் ஒரு ராட்சத மீன் அப்பெருவெள்ளத்தை பிளந்துகொண்டு மேலே எழுந்துவர பெருவெள்ளம் இரு துண்டாகி ராட்சத மீனைச் சுற்றி ஆர்பரித்து ஓடியது. அம்மீனின் காந்தப் பார்வையால் கோடானுகோடி ஜீவராசிகளும், உயிரிணங்களும் ஈர்க்கப்பட்டு ஊழிக்கால முடிவில் மறு உயிர் கொள்ளும் பொருட்டு அதன் அசுரக்கொம்பினை இறுகப்பற்றிக்கொண்டன. நீடித்த பிரளய காலம் முழுதும் தன்னை நாடிய உயிர் பீஜங்களை காப்பாற்றி புதுயுக பூமண்டலத்தில் தூவிவிட்டு ராட்சதமீன் மீண்டும் கடலுக்குள் ஒளிந்தது “
திடுக்கிட்டு எழுந்தேன். என்ன கனவு இது.! கொம்பு முளைத்த ராட்சத மீன்…! மீனா அது ? மீனின் லட்சனம் எதுவுமில்லாத என்ன உருவமது? அந்த அசுர உருவம் மனத்திரையில் தோன்றி தோன்றி மறைந்தது. பிரளயம் வந்து தான் இவ்வுலகம் அழியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பிரளயம் என்றைக்கு எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது. வெறும் கட்டுக்கதை என்று நினைத்துக்கொண்டிருந்த விஷயம் என் கனவில் வந்து ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. நீரு சூழ் உலகை கனவிலே கண்டதற்கே நாடி நரம்பெல்லாம் நடுங்கிப் போய்விட்டது. மூச்சே நின்றுவிடும் போல் மூச்சிரைத்தது. இந்த உலகம் இல்லாமல் போய்விடுமா? உண்மையிலேயே இல்லாமல் ஆகிவிடுமா! என் கனவு வீடு என்ன ஆகும்! விடிந்ததும் முதலில் போய் குறைந்த பட்சம் ஒரு மீன் தொட்டியாவது வாங்குவது என முடிவு செய்தேன்.
