
வெல்போர் இராமன்
நெய்தல் நிலத்தில் வாழும் தலைவனும் தலைவியும் கொண்ட காதல் ஊர் முழுதும் பேசும் பொருளாகி இருந்தது. அங்கு வாழ்ந்திருந்த மீனவப் பெண்கள் தினமும் அதையே பேசித் திரிந்தனர். அச்சமயம் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. அதனால் இப்பேச்சு சட்டென்று அடங்கியது.
இது எவ்வாறு இருந்ததென்றால் சீதையைத் தேடி தனுஷ்கோடி வந்திருந்த இராமன் அங்கு வேத நூல்களை ஆராயும் போது சத்தமிட்டுக் கொண்டிருந்த பறவைகளை அமைதியாகும் படி கட்டளையிட அவை உடனே அமைதியானது போல் இருந்தது.
கம்பனிலோ வால்மீகியிலோ இல்லாத இந்த இராமாயணக் காட்சியை மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது
முழு அகநானூற்றுப் பாடலும் இங்கே.
“கொடுந்திமிற் பரதவர்
வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும்
சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப்
பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை
பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த
கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர்
அம்பல் தூற்றப்,
பலரும் ஆங்கு அறிந்தனர்
மன்னே; இனியே
வதுவை கூடிய
பின்றைப், புதுவது
பொன்வீஞ் சழலொடு
புன்னை வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக்
கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த
கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர்
தழைஅணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர்
தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம்
இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன்
அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ்,
அழுங்கல் ஊரே.”
