
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். இந்தப் பெண்மணி பதவியேற்பின் போது தமிழை தட்டுத்தடுமாறி பேசியதை பலரும் கேலி செய்கிறார்கள்,
அதில் பெரும்பாலானவர்கள் ஊடகத்தினர்.
ஏதோ அந்தம்மா அறிஞர் அண்ணாவைப் போல் பேச வேண்டும் என நினைத்து இந்தக் கேலி நிகழ்த்தப்படுகிறது. படிப்பறிவு இல்லாத இவரைப் போன்றவர்கள்தான் உள்ளாட்சியின் உயிர்நாடி. அதிகாரம் அங்கே செல்வதை விரும்பாத படித்த ஒரு தலைமுறை இதை சீண்டிப் பார்க்கிறது.
இன்றைக்கு ஊடகத்தில் பணி செய்பவர்கள் பாதி பேருக்கு தமிழே தெரியாது. நான் ஒரு காட்சி ஊடகத்தின் பகுதியாக வேலையில் இருந்தபோது பலர் தமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு, நிகழ்ச்சியில் பேசினார்கள். அவர்களுக்கு ‘ழ்’ , ‘ள்’. வித்தியாசம் தெரியவேண்டாம். க,ஞ,ச வித்தியசம் கூடத் தெரிவதில்லை. அவர்களே இந்தப் பாமர பிரஜைகள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள் என்றேன். அவரும் அதை ஆமோதித்தார்.
இதையே காப்பி அடித்து பாஜக ஆதரவாளர் ஒருவர் கருத்திட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில் இருந்தவர் அதிமுகக்காரர். அதை அவர் அணிந்துள்ள துண்டு சொல்கிறது. அதைக்கூட கவனிக்காமல் ஊபி என முத்திரைக்குத்தி பகடி செய்திருந்தார்.
ஒருவரின் பின்புலம் அறியாமல், வெறும் ஒரு வீடியோவை வைத்து கேலி பேசுவது பெரிய வன்முறை இல்லையா?
இந்திய பொருளாதார மேதை அமர்தியா சென் கார்பரேட் பொருளாதாரம், தொழித்துறை பொருளாதாரம் பற்றி எல்லாம் விவாதித்துவிட்டு ரோட்டுக் கடை நடத்தும் இட்லி கடை ஆயாவின் பொருளாதாரம் குறித்தும் விளக்குகிறார். அந்தப் பாட்டிகளையும் உள்ளடக்கியதுதான் பொருளாதாரம். அதற்குப்.பெயரை ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் இல்லை. இட்லிகடை பொருளாதாரம். அதுவும் இந்தியாவை உயர்த்துகிறது என்கிறார் சென்.
ஒருவர் பேச்சில் தடுமாறலாம். தன் செயலால் அவர் அதை பன்மடங்கு ஈடு செய்யலாம்.
பொது அறிவே இல்லாத ஒரு ஊடக உலகம் எல்லாவற்றிலும் கேலியை மட்டுமே எதிர்பார்ப்பது தான் அறியாமை. கொடுமை.
