
குடியிருந்த வீடு!
அதே வீடு, அதே வாசற்கதவு.
வீட்டின் வெளிப்பூச்சு மட்டும் மாறியிருந்தது!
ஏதோ தோன்றியது, காற்றடித்த வாக்கில் செல்லும் பட்டம்போல் அந்தப் பக்கம் வந்தேன். இருபத்தேழு வருடங்கள் நான் குடியிருந்த ராசியில்லாத வீடு; நான் வெளியேறிய பின் எப்படியிருக்கிறதென்று பார்க்க ஓர் ஆசை.
சன்னமாகக் கதவைத் தட்டினேன்.
‘க்ரீச்’
திறக்கும்போதே முனகியது கதவு.
‘என்ன மனுஷன் இவன், கதவு கீலுக்கு ரெண்டு மிலி கிரீஸ் ஆயில் போட மாட்டானா? அப்போ மாதிரியே இன்னும் சத்தம் போடுதே’ – நான் கேட்கவில்லை.
ஆறடி உயரம், கட்டம்போட்ட லுங்கி, சிவப்பு ஜிப்பா, உப்பும் மிளகுத்தூளும் தெளித்த தலை, தொங்கு மீசை, என்னைத் தாண்டிப் பார்க்கும் பார்வை…
ஹாலைப் பார்த்தேன், மாறியிருந்தது. என் சோபா இருந்த இடத்தில் ஓர் ஆடுநாற்காலி – அவன் எழுந்து வந்த பின்னும் ஆடிக்கொண்டிருந்தது! அருகில் திருப்பிப் போட்ட ‘எல்’ மாதிரி நீல வண்ணத்தில் பெரிய சோபா செட். அதன் மேல் நான்கு மஞ்சள் நிற குட்டித் தலையணைகள்.
என் சிறிய டிவி இருந்த இடத்தில் பெரிய வெளிநாட்டு டிவி.
எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த பிள்ளையார்ப்பட்டி விநாயகர், ஆட்டினை அணைத்து நிற்கும் இயேசுவாக மாறியிருந்தார். கீழே மின்சாரத்தில் ஒளிரும் மெழுகுவர்த்தி.
இடது பக்கம் இருந்த பால்கனியில் பல வண்ணங்களில் நாலைந்து குரோட்டன்ஸ் செடிகள். எட்டிப் பார்த்தேன், நடுவிலிருந்த துளசி மாடம் காணவில்லை. அடுத்த வீட்டு குமாரசாமி வழக்கம்போல் தன் வீட்டு ‘ஃப்ரெஞ்சு’ மாடல் ஜன்னலை மூடியே வைத்திருந்தான். சந்தேகப் பிராணி.
டிவிக்கு இருபுறமும் அழகான புத்தக அலமாரிகள். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள். என் தி.ஜா.வும், புதுமைப் பித்தனும், சுஜாதாவும் இருந்த இடம்…
பிறர் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். எனக்கு அதெல்லாம் கிடையாது, என்னைத் தடுப்பவன் யார்? எட்டிப்பார்த்தேன். கிழக்கு மேற்காக இருந்த படுக்கை, வடக்கு தெற்காகப் போடப்பட்டிருந்தது. கலை நயத்துடன் அழகான படுக்கை விரிப்பு. முதல் முறையாக இங்குதான், நானும் அவளும்…. சரி, இப்போது ஏன் அதெல்லாம். அவள் லண்டனில் அவனுடன் நிம்மதியாக இருக்கட்டும்.
கோழி வறுக்கும் வாசம் சமையலறையிலிருந்து வந்து கொண்டிருந்தது. நான் சுத்த சைவம். அந்தப் பக்கம் போகாமல் திரும்பி விட்டேன்.
பார்த்தது போதும், லுங்கி ஜிப்பாவை ‘டக்’ கெனத் தாண்டி வெளியே வந்துவிட்டேன்.
இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, காரிடரில் நடந்து கீழேயும் எட்டிப் பார்த்துவிட்டு, ‘யாருமில்லையே’ முகபாவத்துடன் கதவைச் சார்த்தி, உள்ளே சென்றான் தொங்கு மீசை.
படியிறக்கத்தில் இருந்த கண்ணாடியில் பார்த்தேன். நானேதான் …
பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணாடியில் என் கால்கள் சிறு துகள்களாய் நொறுங்கிச் சிதறின. குனிந்து பார்த்தேன்.. என் கால்களைக் காணவில்லை. தொடர்ந்து கைகளும், தலையும் சிறு சிறு ஒளிரும் பொடித் துகள்களாய்க் காற்றில் கரைந்தன.
மேகம் போலக் கலைந்து, ‘உஷ்’ என்ற சுருதியுடன் வேப்ப மரம் தேடிக் காற்றில் கரைந்து மறைந்தேன்.
