டைரிக் குறிப்பு 2022/ஜெ.பாஸ்கரன்

/

நானும் லைப்ரரி வாசிப்பும்!

எதுதான் வாழ்க்கையில் நேராக நடக்கிறது? கொஞ்சம் முன்னே, பின்னே என்றுதான்… படிப்பு, வேலை, பதவி, திருமணம், குழந்தை குட்டிகள், பணம், புகழ், அங்கீகாரம் இப்படி எதையெடுத்தாலும் கொஞ்சம் முன்னே பின்னேதான் நிகழ்கிறது. (சுய முன்னேற்றக் கட்டுரையோ என்று அஞ்சி, முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை – இது ‘அதுவல்ல’!)

தினமும் எழுத ‘மூட்’ இல்லை. அதனால் எப்போது எது தோன்றுகிறதோ அப்போது அதை எழுதலாம் எனத் தோன்றுகிறது. முன்னால் நடந்தது பின்னேயும், பின்னல் நடந்தது முன்னேயுமாக வரலாம் – என் டைரிக் குறிப்புதானே!

நூலகங்களுக்கு (லைப்ரரியேதான்!) நான் அதிகம் சென்றதில்லை மெடிகல் காலேஜ் வரும் வரை. புத்தகங்கள் வாங்க வசதியில்லாத நிலையில், மெட்ராஸ் மெடிகல் காலேஜ் லைப்ரரிக்கு செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. வேறு காரணங்களுக்காக லைப்ரரி செல்பவர்களைப் பற்றிய வியாசம் இல்லை என்பதால்,அவைகளைப் பற்றி வேறொரு சமயம் சொல்கிறேன். கிடைக்கின்ற அரை மணி, ஒரு மணி நேரத்தில் படிப்பதும், நோட்ஸ் எடுப்பதும் பிரதானமாக இருந்தாலும், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் சுவாரஸ்யங்கள் மனதைக் கலைப்பவை! குண்டு குண்டாகப் புத்தகங்கள் – Gray’s Anatomy, Ganong’s physiology, Robbin’s pathology, Harrison’s Medicine, Bailey and Love’s surgery – வாசித்த நாட்கள்! வலது பக்கம், கடைசீ வரிசை, முதல் சீட்டில் குனிந்த தலை நிமிராமல் வாசித்துக்கொண்டிருக்கும் அந்த அழகிய பெண்ணின் முகம் நினைவிலிருக்கிறது – பெயரோ, ஜூனியரோ, சீனியரோ இன்றுவரை தெரியாது – அவ்வளவுதான் நமது பொது அறிவு….

சென்னை ப்ரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரிக்குப் போய், பாடப்புத்தகங்கள் மட்டும் எடுத்துப் படிப்பது வழக்கம் – அமெரிக்கன் லைப்ரரியில் அவ்வளவாக புத்தகங்கள் இருக்காது – வருடத்தில் ஒரு முறையோ, இரு முறையோ, கீழ்த்தளத்தில் அமெரிக்கன் குறும்படங்கள் பார்த்தது நினைவிலிருக்கிறது –

மற்றபடி நினைவிலிருக்கும் லைப்ரரிகள், லயொலா கல்லூரி லைப்ரரி, கன்னிமாரா லைப்ரரி (ஓரிரு முறைதான்), லண்டன் நேஷனல் ஹாஸ்பிடல் லைப்ரரி, கேன்சர் இன்ஸ்டிட்யூட் லைப்ரரி, அசோக் நகர் லைப்ரரி (விருட்சம் கூட்டங்கள் நடந்ததால்!).

கோட்டூர்புரம் லைப்ரரிக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அமர்ந்து படிக்கும் அளவிற்கு நேரமும், பொறுமையும் இருக்குமா தெரியவில்லை!

அழகிய சிங்கர் எப்போது – அமெரிக்காவோ, பங்களூரோ – வெளியூர் சென்றாலும் அங்குள்ள லைப்ரரிக்குச் சென்று வாசிப்பதாகக் குறிப்பிடுவார். என்னைப் பொறுத்தவரையில் இது ஆச்சரியமான விஷயம். எந்த சப்ஜெக்டில், எந்த ஆசிரியரின், எந்த மாதிரி புத்தகத்தை எப்படித் தேர்வு செய்வார் என்று வியப்பாக இருக்கும். எனக்கு, எப்போதுமே ஷெல்ஃப் ஷெல்ஃபாக புத்தகங்களை வேடிக்கை பார்ப்பதிலும், சிலவற்றைப் புரட்டிப் பார்ப்பதிலுமே நேரம் சென்றுவிடும். லைப்ரரிகளில் புத்தகங்களைத் தேர்வு செய்வதும், வாசிப்பது ஒரு கலை என்றே நினைக்கத் தோறுகிறது!

சரி, விஷயத்துக்கு வருகிறேன்..

கனடாவில் சின்னப் பெண், அவள் இருக்கும் இடத்தில் உள்ள லைப்ரரிக்கு போய்வரச் சொன்னாள் – நான் ஏதோ எழுதுகிறேன் என்று அவளுக்குத் தெரியும். ‘ஓக்வில்லி (Oakville) டிஸ்ட்ரிக் லைப்ரரி’ ஓர் அழகிய சிறிய இடம். புத்தகம் திருப்புவது, வேண்டிய புத்தகங்களைத் தேடுவது, மற்ற விபரங்கள் எல்லாம் ஒரே கம்ப்யூட்டர் மயம். ஃபிக்‌ஷன், நான்-ஃபிக்‌ஷன், சிறுவர்கள் பகுதி எனப் பல பிரிவுகள். புதிய வரவுகள் தனியாக ஒரு மேஜையின் மேல் நின்றுகொண்டு, என்னை வாசி, என்னை வாசி என்று சொல்லிக்கொண்டிருந்தன. அவள் முன்பிருந்த ’மிட்சிசாகா டிஸ்ட்ரிக் லைப்ரரி’ இதைவிடப் பெரியது என்றாள் – நமக்கு எல்லாம் ஒன்றுதானே என்று நினைத்துக் கொண்டேன்!

அங்கேயே தனியாக சில ப்ரவும் கவர்களில் இரண்டு மூன்று புத்தகங்கள் போட்டு வைத்திருந்தார்கள். ‘என்ன விலைக்கா?’ என்றேன். மாப்பிள்ளை சொன்னது புதியது. சில நல்ல புத்தகங்களை – லைப்ரரியனின் சாய்ஸ் – தேர்ந்தெடுத்து ‘வாசிக்கலாம்’ என்ற வகையில் வைத்திருக்கிறார்கள்! நமக்காக அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள்! வேண்டுமானால் எடுத்துச் சென்று வாசிக்கலாம்! நான் இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயம் இது.

இருந்த நேரத்தில் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே ஐத் தேடினேன். கம்ப்யூட்டர் ’எல்லாப் புத்தகங்களும் வெளியே போயிருக்கின்றன – வேண்டுமானால் ரிஸர்வ் செய்து விடுங்கள்; வந்தவுடன் தகவல் தருகிறோம்’ என்று கண் சிமிட்டியது!

விரைவாகப் பார்த்ததில் இரண்டு புத்தகங்கள் எடுத்து வந்தேன் – ஏமாற்றவில்லை – நேர்ந்தெடுத்து பத்திகளை வாசித்து வருகிறேன்!

இரண்டு நாட்கள் சென்று, வீட்டிற்கு ‘ஹெமிங்வே’ ன் சிறுகதைத் தொகுப்பு ஒன்று அமேசானில் வந்தது! விபரம் கேட்ட பெண் அன்றிரவே ஆர்டர் செய்திருக்கிறாள்! மகிழ்ச்சி.

சான் பிராசிஸ்கோவில் வாங்கிய புத்தகங்கள் பற்றி – முன்னமே நடந்த விஷயமானாலும் – பின்னால் எழுதுகிறேன்…