எஸ் . சண்முகம்/கவிதை

யாரையுமே குறிப்பிடாமல் தெருவில்
ஒருவர் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி
விற்க கூவிச் செல்கிறார்
எத்தனை தெருக்களைக் கடந்தோம் என்று
எண்ணியிருப்பாரா என்று தெரியவில்லை
எட்டிப் பார்த்த முகங்களில்
வாங்கும் பிரயாசையின் துளிர்கள்
தென்பட்டனவோ இல்லையோ
மாடியைவிட்டு இறங்கி வந்து
விலை யார் பக்கம்
லாபக் கயிறு இழுபட்டு
இறுதியில் வந்தடையும் தருவாயில்
விற்பவரின் எதிர்பார்ப்பு கைநழுவிப் போவதும்
அடுத்த தெருவின் நடுவில்
இதேபோல் ஒருவர் விலைகேட்டு
சிறிய விலைகேட்பு படலத்தின் முடிவில்
பொருள் பணமாகும் நொடியும்
கடந்த வந்த தெருக்களும் முகங்களும்
அவருள் குரலாகவே சேர்ந்தே நகர்ந்துவிடும்.