
வீட்டின் மொட்டை மாடியில்
விடியற்காலைப் பொழுதில்…
படியளவு பயிறு தானியங்களை
கொட்டிப் பரப்பிய தட்டுகளை,
குனிந்து நான் வைக்கும் முன்…
சுற்றுக் கைப்பிடிச் சுவரெங்கும்
பிடிப்பிடியாக தானியத்தை – என்
பேத்தி அள்ளி இறைத்திடுவாள்!
பக்கத்திலுள்ள மசூதி,
கோவில்களிலிருந்து,
சிறகடிக்கும் புறாக்கள்
சிவந்த மூக்குக் கிளிகள்
சிட்டுக் குருவிகளுடன்…
கருப்புநிறக் காக்கைகளும்
அணில் பிள்ளைகளும்
அழைக்காமலேயே
அன்றாடம் உண்ண வரும்!
கொடிக் கயிறுகள் மீது
வரிசையாக அமர்ந்திருந்து,
கொத்தித் தின்று விட்டு,
எச்சங்களை விட்டுவிட்டு
எங்கேயோ பறந்துவிடும்!
விரிசல் சுவர் இடுக்கில்
துளிர்த்த விதைகளின் வேர்
ஓர் அரும்பை மலராக்கி
பேத்தியைக் கவர்ந்தது!
ஆழ வேர் பதிந்தால் – சுவர்க்கு
ஆபத்தென உணர்ந்த நான்
அதைத் துளிர்க்கவிடாமல்,
அமிலம் ஊற்றி செடியை
அழித்து விட்டேன்!
“ஏன்.. தாத்தா? செடியைப்
துளிர்க்க விடாமல் அழிச்சீங்க!
அதுக்கும் உயிர் உண்டு தானே?”
என்று பேத்தி கேட்டதும் தான்,
துளிர்த்தது எனக்குள் ஞானம்!

அருமை அருமை