கம்பன் கவியமுதம்—35/வளவ. துரையன்

குப்பையில் இரத்தினம்

சூட்டு டைத்தலைச் செந்நிற வாரணம்
தாள் துணைக் குடைய தகைசால்மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ [59]

[சூட்டுடை=உச்சிக் கொண்டை கொண்ட; வாரணம்=கோழி; தாள்=கால்; மணி=இரத்தினம்; குரீஇயின் குழாம்=குருவிக் கூட்டங்கள்]

ஒரு நாட்டின் செல்வ வளம் கூற வரும்போது புலவர்கள் சற்று மிகையாகக் கூறுவதே மரபு. நெல்லை வீட்டு முற்றத்தில் காயவைத்துக் காவல் காக்கும்போது அந்நெல்லைக்
கொத்த வரும் கோழிகளைத் தம் காதில் அணிந்துள்ள பொன்னாலான தோடுகளைக்
கழற்றி விரட்டுவார்கள் என்று ஒரு பழம்பாடல் கூறும்

அதே மரபில் கோசல நாட்டின் குப்பைகளில் கூட
இரத்தினங்கள் இருக்கும் என்று கம்பன் கூறுகிறான்.

உச்சியில் கொண்டையைக் கொண்ட தலையையும், செந்நிறத்தையும்
உடைய கோழிகள் தம் கால்களினால் குப்பையைக் கிளறுகின்றன.
அப்போது குப்பையில் கிடக்கும் இரத்தினங்கள் வெளிப்பட்டு ஒளி விடுகின்றன.
அந்த இரத்தினங்களை மின்மினிப் பூச்சிகள் என்று கருதிய குருவிக் கூட்டங்கள்
அவற்றைக் கொண்டுபோய்த் தம் கூட்டில் சேர்க்கும்.

முதல் அடியில் ’செந்நிற’ என்பதை ’தூநிற’ என்று பாடம் கொண்டு தூய்மையான வெண்ணிறம் என்று சொல்வாருமுண்டு.