
புயலில் அடிபட்டது மரம்.
முறிந்த ஒரு கிளையின்
சிறு கிளைகள்
ஒடிந்து
பெருக்கல் குறியாக
இடையில் சிக்கியது
சின்னஞ்சிறு அணில்.
சிறுகிளைகள்
அமைத்த சிலுவையில்
அறையப்பட்டு
துடித்தது அணில்.
செய்தி சொன்னது.
இன்னமும் வலியில் துடித்துக்
கொண்டிருக்கிறதா அணில்?
வேதனையிலிருந்து அதை மீட்டாரா
மனிதர்களோ,
மரணமோ?
பதிலில்லை.
எந்த சேதியுமில்லை.
உடைந்த சிறுகிளைகளிடையே
நசுங்கித்துடிக்கும்
அணில்
அதன் வலியில்
சிக்கித் தவிக்கும்
என் மனம்.
