
அமெரிக்கவைப் போல சுற்றுலாத் தலங்களைக் கண்டு, சிறப்பாக பரமரிப்பதுபோல நம் நாட்டிலும் செய்தால் நன்றாக இருக்கும். நம் ஊரில் இல்லாத இடங்களா? இயற்கையுடன் இயைந்த மலைப்பிரதேசங்களும், அருவிகளும், காடுகளும், புராதன கட்டடங்களும், சிற்பங்களும், வரலாற்றுச் சின்னங்களும் கேட்பாரற்று சீரழிகின்றன. கேட்டால் அரசியல் பேசுவார்கள். மக்களுக்கும் பெரிய விருப்பம் இல்லை. இலவசங்களும், டிவி ஷோக்களும் போதுமானதாக இருக்கிறது. பாரம்பரியம் பேசும் கோயில்களும், கலாச்சாரத் தொன்மங்களும் தன் முகங்களை இழந்து வருகின்றன – எங்கும், எதிலும் அரசியல். ஏதோ சொல்ல வந்து, எங்கோ போய்விட்டது….
வெள்ளிக்கிழமையோ, திங்கட்கிழமையோ விடுமுறை என்றால், அந்த வாரக் கடைசீ லாங் வீக் எண்ட் (Long week end) என்கிறார்கள். இரண்டு மூன்று மணிநேரங்கள் பயணம் செய்து ஏதாவதொரு சுற்றுலாத் தலத்திற்கு குடும்பத்துடன் செல்வது இங்கு வழக்கமான ஒன்று. சான் ஃப்ரான்சிஸ்கோ கிட்டத்தட்ட நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற க்ளைமேட் கொண்டது. ஐந்து மணி நேரப் பயண தூரத்தில் -கிட்டத்தட்ட 200 மைல்கள் தூரத்தில் – உள்ள இடம் ‘லேக் டாஹோ’ (Lake Tahoe). உலகின் மிகப் பழமையான,இயற்கையாக உருவான (மனிதன் உருவாக்கியதல்ல!), இருபது ஏரிகளில் இதுவும் ஒன்று. இதைச் சுற்றியுள்ள மலைகளும் – Sierra Nevada Mountains – பனிப் பொழிவுகளும் (Snowfall) இதனை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளன.
நாங்கள் நான்கு குடும்பங்கள், குழந்தைகளுடன் ஒரு லாங் வீக் எண்டை லேக் டாஹோவில் கழித்தோம்.
நாங்கள் சென்ற இடம் சவுத் லேக் டாஹோ. டாஹோ ஏரியைச் சுற்றியுள்ள மற்ற இடங்கள் டாஹோ சிடி, இன்க்ளோன் வில்லேஜ், ஸ்டேட்லைன். கலிஃபோர்னியா – நிவேடா பார்டரில் உள்ள சியாரா நிவேடா மலைகள் சூழ உள்ள ஏரி டாஹோ. சுத்திகரிக்கப்பட்ட நீரைப் போன்ற சுத்தமான நீர் (99.994%) நிறைந்தது (Fresh water lake). சுத்தமான காற்றும், நீரும் பளிங்கு போன்ற நீல நிற ஏரிக்குக் காரணங்கள் என்கிறார்கள். நேராக உருகி விழும் பனியும்(40%), புல்வெளிகள், சதுப்பு நிலங்களில் வடிகட்டி வரும் நீரும் ஏரியைச் சேர்வதே, சுத்தமான நீருக்குக் காரணம் என்ற குறிப்பும் உள்ளது.
சவுத் லேக் டாஹோ சிடி, தரை மட்டத்திலிருந்து 6237 அடி உயரத்தில் உள்ளது. 192 சதுர மைல் பரப்பளவுள்ளது. எல்லா வசதிகளுடன் தங்கும் விடுதிகள், வீடுகள், கடைகள், பனிச்சறுக்கு விளையாடும் ரிசார்டுகள் என தங்குவதற்கேற்ற இடம். மார்ச்-மே, செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும் சீசன். மற்ற மாதங்களிலும் ஓரளவுக்கு பனியும், குளிரும் உள்ள இடம்.
தனி வீடு ஒன்றை மூன்று நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். பெரிய ஹால், கிச்சன், ஐந்து படுக்கை அறைகள் கொண்ட தனி வீடு. கையில் வேண்டிய மளிகை, சில பாத்திரங்கள், பழங்கள், பால், நொறுக்குத் தீனிகள் என நான்கு கார்களில் எங்களுடன் எடுத்துச் சென்றிருந்தோம். ஹாலிலிருந்த பெரிய கண்ணாடிக் கதவு வழியே, வெளியே பரந்து கிடந்த நீல நிற ஏரியையும், அதில் நீந்திக்கொண்டிருந்த வாத்துகளையும் (அதுகளுக்குக் குளிரே கிடையாதோ?), அதைத் தாண்டி தூரத்தில் தொடர்ச்சியாக நின்றுகொண்டிருந்த பனி போர்த்திய மலைகளையும், விடியற்காலையில் சூரிய வெளிச்சத்தில் ஒளிர்ந்த பனி படர்ந்த மலை உச்சிகளையும் காண்பது சுகமானது. படங்களில் பார்த்துள்ள பனி மூடிய கைலாச மலை – இமயமலை – நினைவுக்கு வந்தது. எதுவாய் இருந்தால் என்ன, எங்கும் இருக்கும் பரம்பொருள் ஒன்றுதானே! அதனால் இதுவும் கைலாயம்தான் என நினைத்துக்கொண்டேன். கண்ணதாசனின், ‘பனி படர்ந்த மலையின் மேலே’ பாட்டு மனதில் வந்து போயிற்று!
காலை எழுந்தவுடன் சூடான காப்பி (அதற்கென ஒரு காஃபி மெஷின் கொண்டுவந்திருந்தோம்! விசேஷம் என்னவென்றால் வறுத்த காப்பிக்கொட்டைகளைப் போட்டால் ஃப்ரெஷ் ஆக பொடியரைத்து அதுவே டிகாக்ஷனை வெளியே விடும், தேவையான பாலையும் சேர்த்து சூடாகக் குழாயில் கொடுத்துவிடும் – சர்க்கரை சேர்த்து, குடிக்க வேண்டியதுதான்!), காலைச் சிற்றுண்டி (பிரட், பட்டர்,ஜாம், சீரியல், தோசை இட்டிலி சட்டினி பழங்கள் – அவ்வளவுதான்!), மதியம் குழம்பு, பொறியல், ரசம், தயிருடன் சாப்பாடு, (சிலருக்கு வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட பீட்சா, ஃப்ரடு ரைஸ், குருமாவும் உண்டு), மாலை காபி, கொறிக்க ஸ்னாக்ஸ், இரவும் டிபன்! இரண்டு வயதுக் குழந்தை முதல் எழுபது வயது முதியவர் வரை க்ரூப்பில் இருந்ததால், வேண்டியதைச் சாப்பிட இந்த எலாபரேட் ஏற்பாடு!
தங்கிய இரண்டு நாட்களும் காலையில் முன்னமேயே பதிவு செய்திருந்த ‘பனிச்சறுக்கு’ ரிஸார்டுக்குப் போனோம் – Granli baaken ski resort – பனியில் சறுக்கக் காலில் மரம் / ப்ளாஸ்டிக்கில் ஆன நீண்ட பாதங்களைக் கட்டிக்கொண்டு, சறுக்கி விழுந்தால் தலையில் அடிபடாமல் இருக்க ஹெல்மெட் கவிழ்த்துக்கொண்டு (புதியவர்கள் பலர் சறுக்கி விழுவது மிகவும் சாதாரணமாகக் காணக் கிடைப்பது!) மேலும் கீழுமாக சறுக்கி சாகசங்கள் செய்வது ஒரு விளையாட்டு. பிளாஸ்டிக் தொட்டியில் உட்கார்ந்தாற்போல் சறுக்குவதும் மற்றொரு வகை விளையாட்டு. புதியவர்களுக்கு அறிமுகம் செய்து சொல்லிக்கொடுப்பதற்கும் காலையில் ஒரு மணி நேரம் வகுப்புகள் உண்டு!
நடக்கும்போதே சறுக்கி விழும் ஆபத்து இருந்ததால், இந்த விளையாட்டுகளை ஓர் ஓரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். வயது வித்தியாசமின்றி, விடுமுறைகளை வித்தியாசமாக அனுபவிப்பவர்களைப் பார்த்து வியந்தேன்.
பெரிய ஏரியே கடல் போல, அலைகளுடன், மணற்கரையுடன் இருந்தது! மாலையில் ஏரிக்கரையில் நடந்தோம். கரையிலிருந்து ஏரியின் மேல் போடப்பட்டிருந்த மரப்பாலத்தில் நடப்பது ஒரு சுகானுபவம். சுற்றிலும் வெளிர்நீலத் தண்ணீர், அதில் நீந்தும் வாத்துகள், தூரத்தில் தொடர்ச்சியாக மலைகள், பல வண்ணங்களில் ஜாலம் செய்யும் சாம்பல் நிற வானம் – கொஞ்சம் அசந்தால் கவிதை எழுதத் தோன்றிவிடும்!நல்ல வேளை நான் கவிஞனில்லை, நீங்களும் கவிதைகளும் தப்பித்தீர்கள்!
மறுநாள் காலை பனிப் பொழிவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்ற வானிலை முன்னறிவுப்புப் பொய்க்கவில்லை! கார்கள், சாலைகள் எல்லாம் பனிப் போர்வை போர்த்தி சலனமின்றி இருந்தன. கார்களின் பனிப் போர்வையை நீக்கி, வீட்டைக் காலி செய்து, சுத்தமும் செய்து கிளம்பும்போது காலை மணி 11.
குளிர்க்காற்றும் பனி மழையும் கையுறையைத் தாண்டி கைகளைத் தேளாய்க் கொட்டின. நான்கு கார்களில், இரண்டு கார்கள் All wheel drive கார்கள் – பனியில் சறுக்காமல் நல்ல க்ரிப்புடன் செல்லக்கூடியவை. மற்ற இரண்டு கார்களுக்கு, சக்கரத்திற்கு, பிடிப்பிற்கான சங்கிலிகள் மாட்ட வேண்டியிருந்தது – மாட்டிக்கொண்டோம். சாலைகளில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் போகத் தடை – எல்லோரும் அதைக் கடைபிடித்தது நம்மூரில் காணாதது.
அரசு இயந்திரம் – சாலையில் விழுந்துள்ள பனிக் குவியல்களை அகற்றும் நிஜமான இயந்திரங்கள் – உடனுக்குடன் வேலை செய்து சாலைப் பனியை அகற்றின. மேலும் சறுக்காமல் இருக்க உப்பினைத் தூவின.
பனிப்பொழிவு அதிகமாக இருந்தது – முன்னால் ஐந்து ஆறு அடிகளுக்கு மட்டும் சாலை தெரிய, இரண்டு பக்கமும் பனியால் மூடிய மலைகள், ‘ஃப்ர்’ மரங்கள் (கிருஸ்துமஸ் மரங்கள்) என வித்தியாசமான கார்ப் பயணம் – கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அந்தப் பனியிலும், போலீஸ் எல்லா வாகனங்களையும் சோதித்து, காரில் சங்கிலிகள் மாட்டி, பாதுகாப்பாகச் செல்ல உதவினர்.
மலைப் பாதையிலிருந்து இறங்க, இறங்க பனிப் பொழிவும் குறைந்தது. ஓரிடத்தில் கோடு போட்டாற்போல் வெயில் அடிக்கத் தொடங்கியது – இயற்கையின் விளையாட்டு வியக்க வைத்தது!
மேற்கு அமெரிக்காவின் Bay Area – Silicon Valley – இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடம். எல்லா மாநில உணவு வகைகளுக்கும் கடைகள் உண்டு. வரும் வழியில் ‘மைலாப்பூர்’ சவுத் இந்தியன் ரெஸ்டாரண்ட் ஒன்று இருக்கிறது. தென்னிந்திய சைவ உணவு மிகச் சிறப்பாகக் கிடைக்கின்றது – ஃபில்டர் காப்பியும்!
பனிப் பொழிவும், குளிரும் நிறைந்த கனடாவுக்குச் செல்வதற்கு முன் ஒரு முன்னோட்ட அனுபவமாக அமைந்தது டாஹோ ஏரிப் பயணம்!
