
புத்தகம் திருடுபவர்
யாராயினும்
எந்த மொழி
பேசுபவராயினும்
எந்த ஊர்க்காரராயினும்
பதட்டம் நிறைந்த
அந்தச் செயலுக்கு
அவர் புதிதாயினும்
அலட்டிக் கொள்ளாமல் எடுக்கப்
பழகியவராயினும்
காசில்லாமல் கை வைத்தவரோ
கவலையில்லாமல் கன்னம் வைத்தவரோ
வாசிக்கப் போகிறவரோ
யாருக்கோ
வழங்கப் போகிறவரோ
கற்கவோ
விற்கவோ
எடுத்துப் பேசவோ
கடுத்து வீசவோ
எதன் நிமித்தம் இந்தச் செயல்
செய்தவராயினும்
யாரிடமிருந்தோ
பழகிக் கொண்டவரோ
சுயம்புவாகவே சுட்டுப் போனவரோ
பிறகொரு நாள்
வெட்கப் படப் போகிறவரோ
அற்ப மகிழ்ச்சியில்
ஆழப் போகிறவரோ
எப்படிப் பட்டவராயினும்
கணக்கில் வராமல்
போய்விட்ட புத்தகத்தால்
கவிதையில் வந்து விட்ட பெரும் பேறு அவனுக்கு
போனால் போகிறது,
விட்டு விடலாம்,
விமர்சனம் அனுப்பட்டும்
