கம்பன் கவியமுதம்—36/வளவ. துரையன்

முத்துகள் குப்பையாதல்

குற்ற பாகு கொழிப்பவர் கோள்நெறி
கற்றிலாத கருங்கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில்
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே
[62]

[பாகு=பாக்கு; கோள்நெறி=களவு நெறி; நுளைச்சியர்=நெய்தல் நிலப் பெண்கள்; முற்றில்=முறங்கள்; முன்றில்=முற்றம்]

 அவர்கள் நெய்தல் நிலத்தில் வாழும் மிகச் சிறுமியர்; அவர்கள் களவு நெறி அறியாத காமப்பார்வை கொள்ளாத நுளைச்சியர் ஆவர். அவர்கள் பறிக்கப்பட்ட பாக்கை முறம் நிறைய வாரி வந்து கொழிக்கிறார்கள். கொழித்தல் என்பது ஒரு பொருளைச் சுத்தம் செய்கையில் அதனுடன் கலந்து விட்ட குப்பைகளை நீக்குதலாகும். அப்படிக் கொழிக்கும்போது அவர்கள் நீக்குவது பாக்குடன் கலந்து விட்ட முத்துகளாகும். அந்தமுத்துகள் அப்பெண்கள் தம் வீட்டு முற்றத்தில் சிறுவீடு கட்டி விளையாடும்போது சிந்திய முத்துகளாகும்.

இப்பாட்டில் விளையாடுவதற்குக் கூட முத்துகள் பயன்பட்டன என்பதும், அவற்றை குப்பையாகக் கருதி நீக்கியதும் அந்நாட்டின் வளத்தைக் காட்டக் கூறப்படுகிறது.

குற்ற பாகு கொழிப்பவர் என்பதற்கு குறுகுதலை உடைய சருக்கரைப் பாகைப் பனையோலையில் சேர்த்து விற்பவர் என்றும் அவர்களிடம் சிறுவீடு கட்டி விளையாடும்போது சிந்திய முத்துகளைக் கொடுத்து பாகை வாங்குபவர் என்றும் பொருளுண்டு. 

இப்பாடலில் திணை மயக்கம் உண்டு என்று வழங்குவர். அதாவது பாக்கு மருத நிலமான வயலில் விளைவதாகும். அவற்றுடன் நெய்தல் நிலமாகிய கடலில் கிடைக்கும் முத்து கலந்துள்ளது என்பது இரு திணைகள் கலந்து வருவதாகும்.