முடிச்சுகளின் உலகம்/அதங்கோடு அனிஷ்குமார்

யார் யாரோ
யார் யாருக்கோ
முடிச்சுபோடுகிறார்கள்.

முடிச்சுகளின் உலகம் மர்மங்களின்
பின்னல்களாலானது.

போட்டவர்களையே பரிகசிக்கும்
அவிழ்க்க முடியா
முடிச்சுகள்
சில நேரம்
அவிழ்ப்பவர்களின்
அங்கலாய்ப்புகளை
ரசிக்கிறது.

ஒரு முடிச்சு
அவிழ்க்கப் படுகையில் இன்னொரு முடிச்சு
விழும் விநோதம்
முடிச்சுகள்
முடிவிலிகளென
நம்மை
நம்ப வைக்கிறது.

சிலந்தி வலையில்
சிக்கிக் கொள்ளும்
சிறுபூச்சிகளென
முடிச்சுகளுக்குள்
சிக்கும் மனிதர்களை முடிச்சுகளின்
அகோரக்கரங்கள்
பந்தாடுகின்றன.

ஒவ்வொரு முறை அவிழ்க்கும் போதும்
வேறொன்றுவிழும் என
தொடரும்
முடிச்சுகளின்
பயணத்தில் சலிப்புற்று
தானே அவிழட்டுமென காத்திருப்பவர்களை
காலத்தின் முடிச்சுகள்
பெருவாதைகளுக்குள் தள்ளிவிட்டு
மர்மப் புன்னகை வீசி திரும்பிப் போகின்றன.