
விவேக சிந்தாமணி
மூடரை மூடர் கொண்டாடியது போல
முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை
விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்று
நினைப்பதும்,….நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
பாடல்
கழுதை காவெனக் கண்டுநின் றாடிய வலகை
தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்
பழுதி லாநமக் கார்நிக ராமெனப் பகர்தல்
முழுது மூடரை மூளர்கொண் டாடிய முறைபோல்
பொருள்
கழுதை = கழுதை
‘கா’ வெனக் = காள் காள் என்று பாடியதைக்
கண்டு = கண்டு
நின் றாடிய = நின்று, அந்தப் பாட்டுக்கு ஆடிய
வலகை = பேய்
தொழுது = அந்தக் கழுதையை தொழுது
மீண்டும் = மீண்டும்
அக் கழுதையைத் = அந்தக் கழுதையை
துதித்திட = போற்றிட
அதுதான் = அந்தக் கழுதையும் தான்
பழுதி லா = குற்றமில்லாத
நமக் கார் = நமக்கு யார்
நிக ராமெனப் = நிகராம் என
பகர்தல் = சொல்லி
முழுது மூடரை = முழு முட்டாளை
மூளர்கொண் டாடிய முறைபோல் = முட்டாள் கொண்டாடியது போல
சங்கீதம்னா என்ன என்று கழுதைக்கும் தெரியாது, பேய்க்கும் தெரியாது.
எவ்வளவு பொருள் பொதிந்த செய்யுள்!
எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதல்ல முக்கியம்
பாராட்டுபவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
