நடிகர் ஜெயசங்கர் பற்றி…/டாக்டர் விஜய்சங்கர்

சட்டக் கல்லூரியில் படித்து வந்த என் அப்பா சினிமா மீது கொண்ட மோகத்தால் திடீரென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. இதற்காக தனது குழந்தைகள் நன்கு படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அப்பாவின் 100-வது படமான இதயம் பார்க்கிறது என்ற படத்தில் கண் பார்வை இழந்தவர் வேடத்தில் நடித்து இருப்பார். அப்போது தனது குழந்தைகளில் ஒருவரை கண் டாக்டராக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் கண் டாக்டருக்கு படித்து கண் டாக்டர் ஆனதும் அப்பா என்னை கட்டியணைத்து நான் திரைப்படத்துறையில் பண்றது ஒன்றும் இல்லை. நீ என்னை விட பெரிதாக சாதிச்சுட்டே என்று கூறி சந்தோஷப்பட்டார். அதைப் போல என் தம்பியை என்ஜினீயருக்கும், தங்கையை டாக்டருக்கும் படிக்க வைத்தார்.

அந்த காலத்தில் அப்பா நடித்த படங்கள் எல்லாம் வெள்ளிக்கிழமையன்று வெளிவந்து வசூலை வாரிக் குவிக்கும். இதனால் ‘வெள்ளிக்கிழமை’ ஹீரோ என்று அழைக்கப்பட்டார். அப்பாவை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிடுவதற்கு பணமின்றி சிரமப்பட்டார். அந்த தயாரிப்பாளரை வீட்டுக்கு அழைத்து வந்து பீரோவில் இருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொடுத்து நீங்க படத்தை வெளியிடுங்கள். அடுத்த படத்துக்கும் பூஜை செய்யுங்கள். நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று கூறினார்.

அப்பா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளின் போது அவர்களை கருணை இல்லத்திற்கு அழைத்து சென்று தன்னுடைய சொந்த செலவில் விருந்து ஏற்பாடு செய்வார். தான் இப்படி செய்தால் மற்றவர்களும் இதேபோல் செய்ய முன் வருவார்கள் என்று கூறுவார்.

துணிவே துணை படப்பிடிப்பின்போது என்னை ஹெலிகாப்டரில் அமர வைத்து சுற்றி பறக்கச் செய்தார். அப்பா தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து கொண்டு இருந்தபோது, சிலர் நீங்கள் ஏன் சம்பளத்தை உயர்த்தி வாங்கக்கூடாது என்று கூறினர். அதற்கு அப்பா ஒரு அலுவலகத்தில் வேலை செய்தால் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களோ அதை விட தயாரிப்பாளர் அதிகமாகவே கொடுக்கிறார்கள் என்று கூறி விடுவார்.

இணையத்தில் இருந்து எடுத்தது