
ஒடிந்து விழுவது போல்
ஒரு நடை
தும்பைப் பூ தோற்கும் வெள்ளுடை
ஒட்டடைக்குச்சி தேகம் எதுக்கெடுத்தாலும்
ஒரு சிரிப்பு தான் ஒண்டிக்கட்டை மகாராஜனுக்கு.
பின் வழுக்கை
குளத்தில்
ஆங்காங்கே தெரியும்
நாரையென
நரை முடிகள்.
யார் சிரித்தாலும்
எல்லோருக்கும்
ஒரே மாதிரி
வயசு வித்தியாசம் பார்க்காமல்
ஒரே ஒரு சிரிப்பு தான்.
ஊருக்கு ஒட்டாமல்
தனித்து நிற்கும்
அவர் சிரிப்பு
அவரின்
வருகை
அல்லது
புறப்பாட்டின் முன்னறிவிப்பு.
‘ஏன்கல்யாணம்செய்துக்கல’
‘செய்து என்ன கண்ட’
சொல்லிட்டு
அதற்கும் ஒரு சிரிப்பு.
‘ஒன்னால யாருக்கு என்ன
பிரயோசனம்’
பதில் சொல்லாமல் போன
ஒண்டி மகாராஜாவின்
சிரிப்புச் சத்தம்
காற்றில் கலக்க
சிரித்துத் தொலைத்தார்
கேட்டுத் தொலைத்த
காத்தமுத்து
‘இதுக்குத்தான்’
அதுக்கும்
ஒரு சிரிப்பு சிரித்தார்
ஒண்டி மகாராஜா.
