
எங்கும் பேச்சற்றுக்
கிடக்கும் காலம்.
எவர் சொல்லையும்
கேட்பதில்லை.
அதற்கான வழியில்
குறுக்கீடேதும் இல்லை.
ஏற்கவும் செய்வதற்கில்லை
யாரோ ஒருவன் வந்தான்
தாடியும் மீசையுமாயும்
ஒளிரும் கண்களுமாய்-
நான் காலம் என்றான்.
காலத்திற்குக் கண்களும்
செவிகளும் உள்ளனவோ
என ஐயம் வந்தபின்
அதைத் தெரிந்துகொள்ள
ஒரு நீண்டயாத்திரை
தேவைப்பட்டது.
எந்த அறநூலில்
தேடவெனும்
பெரும் குழப்பம் கூடவே.
இடையில் கடந்துபோன
காலத்தைக்
கவனிக்கத்தவறியது
தவறென யாரோ சிரிக்க
தாடிதடவித் திகைத்து
நிற்கும் நான்.
தொலைவிலிருந்து
எட்டிப் பார்த்தது காலம்
கேலியாய்.
