“காலம்”/மீ.விசுவநாதன்

அங்குமிங்கும் நன்றாய் அலைபாயும் உள்ளத்தை
சங்கிலி போட்டுநீ கட்டாதே – எங்கும்
திரிந்தே அதுவாக மெல்ல அடங்கும் ;
புரிந்தோர் புகன்ற மொழி. (986) 10.03.2022

பஞ்சுமிட்டாய், வெண்பொங்கல் , பால்கோவா என்றெல்லாம்
அஞ்சாமல் சாப்பிடுறாய் அன்றாடம் -கொஞ்சம்
உணவிலே கட்டுப்பா டோடிருந்தால் நெஞ்சே
மணமாய் இருக்குமாம் வாழ்வு. (987) 11.03.2022

வரும்போதே நன்றாக வாய்விட் தழுதோம்!
கரும்பாய்க் கடித்து ருசித்து விருந்தோம்பி
வாலிபத் தெம்போடு மண்ணின் மணத்துடன்
ஜாலியாய் வாழச் சிரி. (988) 12.03.2022

பிறர்மனம் உற்சாகம் பெற்றுக் களிக்க
நிறைந்த நகைச்சுவை செய்தல் இறையருள்
!எல்லோர்க்கும் வாய்க்காத இன்பவரமென்பேன்!
சொல்லினால் செய்த நகை. (989) 13.03.2022

கடன்பட்டு வந்த உலகில் கவலைக்
கடன்தீரப் பெற்ற வரம்நம் முடனோடு
வந்த நகைச்சுவைச் சொத்தென்பேன்; வாரிவாரித்
தந்தாலும் வற்றா தது. (990) 13.03.2022