
நகர்புற பகுதிகளில்
வாழ்ந்து கெட்ட
ஒரு வீட்டைக் கடக்கையில்
ஏதேதோ நினைவலைகள்
நம்மை வதைக்கின்றன
இந்த வீடு
ஏன் நிராதரவாய் நிற்கிறது
இந்த வீட்டுப் பத்திரத்திரம்
யாரிடம் அடமானம் இருக்கின்றது
இறுதியாக
இந்த வீட்டில் நடந்த நிகழ்வு என்ன
இந்த வீட்டுக்கு என்று
ஓர் உறவுமா இல்லை
இந்த வீட்டு மாமரத்தில்
ஏன் இவ்வளவு கசப்புக்கள்
காய்த்து தொங்குகின்றன
தரை எங்கும் அழுகல் வாடை
ஏன் வழிந்தோடுகிறது
மூலைகள் எங்கும் ஏன் புகைமூட்டம்
இத்தனை புதிர்களுக்கும்
ஒருவரிடமும் பதில் இல்லை
இந்த வீடும் பதிலைதான் தேடுகிறது
பாம்பு தன் வலையைத் தேடுவதைப்போல
இவ்வீட்டின் ஓரப் பொந்துகளில்
திருடன் போலீஸ் ஆட்டமாடும் பிள்ளைகள்
தன் புனைகதைகளால் வீட்டின் சுவருக்கு வண்ணம் பூசுகின்றனர்
வீட்டின் மீதோ
விதவிதமான பாழ் வண்ணம் வளர்கிறது
ஊர் கண்களில் படாமல்
ஒளிந்து கொண்டுள்ள இந்த வீடு
ஆட்சியாளர்களின் கண்களை மட்டுமே
உருத்தத் தொடங்கியுள்ளது
13 மார்ச் 2022 இரவு 9:26
