எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

கடற்கரை முழுக்க
ஊர்ந்து செல்லும் நண்டுகள்
வான் நிறைந்து
கரகரக்கும் கடற்பறவைகள்
விடைபெறுதலின்
கையசைவெனவே மேகங்கள்
பவளப்பாறைகள் மோதி
வைரப் பொடிகளென சிதறும் திவலைகள்
மரகத நீலக் கனவெனவே கடல்
அலைமிதவைப்பலகையெடுத்து
கடல் அளவளாவச் செல்கிறோம்
பேரலைகள் ததும்பும்போது தயாராகி
உச்சம் தொடுகையில் மேலேறி
கீழ் விழுகையில் மிதவைப் பலகையில்
துள்ளித் திரும்பவேண்டும்
திறனும் உள்ளுணர்வும் சமயோசிதமும்
அலைக்கு அலை சிதறலுக்கு சிதறல்
கூர்மையாக வேண்டும்
இங்கிருப்பது போல் இல்லாமலிருக்கவேண்டும்
லயம் மட்டுமே உயிரின் சாத்தியம் என்பதாக
ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும்
இடையில் ஒளிந்து ஒளிரும்
விஸ்வரூபத்தை காண்பிக்க இயலாது
காணத்தான் வேண்டும்