
தேரும் உத்திரமும் ஹோலியுமான
பங்குனி அதற்குள் பிறந்துவிட்டதா
நீரடிக் குமிழிகள் மேலெழுந்து வந்து
மேற்பரப்பில் வெடிக்கின்றனவா
நான் மட்டும் ஏன் இன்னும் பின்னங்கை
ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்
பாவனைகளில் உறைந்திருக்கின்றன
தவறி விழுந்த மைத்துளி
நீர்வண்ண ஓவியத்தில் படர்த்தியிருக்கும்
இலக்கற்ற கருமையென
இது என்ன விளையாட்டு
நாளைய சங்கீதம் எங்கே
இப்போது சூல் கொள்கிறதென
எனக்கு யாரேனும் சொல்வீர்களா?
முன் செல்லும்
நீரோட்டமுள்ள உன் முக
தரிசனத்திற்கு காத்திருக்கிறேன்
