யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்/வண்ணதாசன்

சுந்தரத்திற்கு நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே இன்று இரண்டு தோன்றியது.

ஒன்று அவன் பாரதி நகர் மூன்றாவது தெருவில் வரும் போது ஒரு யானை வர வேண்டும். இரண்டாவது ராமையா அண்ணாச்சி வீட்டில் போய் சிவஞானம் மதினி கையால் ஒரு காப்பி குடிக்க வேண்டும்.

இதற்கு முன்னால் இரண்டு தடவை ராமையா அண்ணாச்சி வீட்டுக்குப் போயிருக்கிறான். ரொம்ப தூரமில்லை . பக்கம் தான். இரண்டு மூன்று தெரு தாண்டினால் சிதம்பரம் நகர் வந்து விடும். முதல் தடவை, அறிவுத் திருக்கோயில் போட்டிருந்த தினசரிக் காலண்டரைக் கொடுக்க மூன்று பேருடன் போயிருந்தான்.

‘யம்மா’ என்றுதான் உட்பக்கம் பார்த்து அண்ணாச்சி சத்தம் கொடுத்தார். மதினி வந்து, ‘ எல்லோரும் வாங்க ‘ என்று கேட்டுவிட்டுக் கும்பிட்டுவிட்டு உள்ளே போனார். ஏனம் கழுவிக்கொண்டு இருந்திருக்க வேண்டும். கை ஈரமாக இருந்தது.

பத்து நிமிஷம் கூட இருக்காது. மதினி ஒரு சின்ன ட்ரேயில் காப்பி கொண்டு வந்தார்கள். சாக்லேட் கலரில் நெளிவு நெளிவாகப் போட்ட ட்ரே நன்றாக இருந்தது. எவர்சில்வர் டம்ளர் இல்லை. மூன்று வெள்ளைப் பீங்கான் கோப்பைகள். முட்டைத்தோடு மாதிரி வழவழப்பு. மதினி இவன் எடுக்க வசதியாக கோப்பையின் பிடி காதை இவன் பக்கம் திருப்பிக் கொடுத்தது.

காப்பி அவ்வளவு ஜோராக இருந்தது. அந்தக் கோப்பை முழுவதிலும் கசப்பையும் இனிப்பையும் அப்படி எப்படிச் சேர்த்து ஊற்றமுடிந்தது மதினிக்கு. நாக்கில் கசப்பும் இருந்தது. இனிப்பும் இருந்தது.

காலிக் கோப்பைகளை எடுக்க வந்த மதினியிடம், கோவாப்ரேட்டிவ் பேங்க் அண்ணாத்தை ரொம்ப உரிமையாய், ‘ உனக்குத் தெரியுமா சிவஞானம், இந்த இடம் எல்லாம் முன்னால குளமாக் கிடந்துது. ‘ என்று சொல்லிக்கொண்டு இருந்தார். சுந்தரத்துக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ‘ காப்பி நல்லா இருந்தது மதினி’ என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டான். சிரித்துக் கொண்டே கோப்பையை ட்ரேயில் வைத்துக் கொண்டார்கள். மதினிக்கு நகம் கடிக்கிற. பழக்கம் உண்டு போல. விரல் நகக் கண் எல்லாம் அப்படித்தான் இருந்தது.

இரண்டாவது தடவை ராமையா அண்ணாச்சி வீட்டை அடையாளம் காட்டுவதற்காக, வீமராஜ் பைக் பின்னால் போயிருந்தான். அப்போதும் அதே மாதிரி பீங்கான் கோப்பையில் அதே மாதிரி காப்பி. இந்தத் தடவை மதினியிடம் சொல்லவில்லை. அண்ணாச்சியிடம் சொன்னான், ‘ காப்பி குடிக்கதுக்காகவே நம்ம வீட்டுக்கு வரலாம் போல’.

இன்றைக்கு எதற்கு, வாக்கிங் போகும் போது அது ஞாபகம் வந்தது என்று தெரியவில்லை. காப்பி வாசனை மூக்கு வரை வந்துவிட்டது. எப்போது சுந்தரம் இடது பக்கம் திரும்பினான், எப்போது கல்வெட்டாங்குழி வந்தது என்று தெரியவில்லை. இன்னும் நான்கு எட்டு வைத்தால் அண்ணாச்சி வீடு.

காக்காய் செத்துக் கிடந்தது. குறுக்கும் மறுக்குமாய் தாழப் பறப்பதும் மேலே வந்து தந்தி போஸ்ட்டில் அமர்வதும் மறுபடி வேறு சில குறுக்குவாட்டில் பறந்து இறந்து கிடந்த காக்கையின் முகம் வரை போவதுமாக இருந்தது. யாரோ ஒரு குத்து ஓலைச் சாம்பலை அள்ளிக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள் போல.

கதவு திறந்து தான் கிடந்தது. முன் ரூம்பில் அண்ணாச்சியைக் காணோம். கொஞ்ச நேரம் நின்றான். காலியாய்க் கிடந்த நாற்காலிகளால் அந்த அறை ஜாடை வேறு மாதிரி தெரிந்தது. அன்ண்ணாச்சி, அண்ணாச்சி என்று சத்தம் கொடுத்தான்.

யாரு என்று முதலில் மதினி சத்தம் வந்தது. கொஞ்சம் கழித்து நனைந்த ஈரச் சேலை கால்களில் அடிபடுகிற சத்தமும்
கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டமாக மூக்கில் ஏறும் சலவைத் தூள் சோப்பு வாசமும்.

‘நாந்தான்’ என்றான். ‘ அண்ணாச்சி இல்லையோ ?’ என்றான். ‘ வெளியியூர் போயிருக்கா. வர ரெண்டு நாள் செல்லும்’.- மதினி ஈரக் கைகளைச் சேலைத் தலைப்பில் புரட்டித் துடைத்துக் கொண்டு’ துணிமணி அலசிப் போட்டுக்கிட்டு இருந்தேன்.’ என்று சிரித்து ‘ ஏன் நிண்னுக்கிட்டே இருக்கே. உட்காரு’ என்றாள். சிவஞானம் மதினி அவனை ஒருமையில் பேசினது சுந்தரத்துக்குப் பிடித்திருந்தது.

மதினி இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தாள். ‘ சிங்கிகுளம் அத்தை செத்துப் போயிட்டாளாம் இல்ல. அவங்க ரெண்டாவது மகளை உங்க தெருவில தானே கெட்டிக்கொடுத்திருக்கு. கொரோனாங்கதால ஒருத்தரும் போகமுடியலையாம்லா. என்ன கொடுமையா இருக்கு”

மதினி வருத்தப்பட்டாள். சுந்தரத்தின் மனைவி எந்த ஊர்க்காரி, எத்தனை பிள்ளைகள் என்று விவரம் கேட்டாள். மதினியின் முகம் பார்த்துப் பேச முடிந்தது. மதினியின் மூக்கு ரொம்ப வித்தியாசமாகவும் கூர்மையாகவும் இருந்தது. உலகத்தில் உள்ள அத்தனை வாசனையையும் மதினியால் முகர்ந்துவிட முடிந்திருக்கும். சுந்தரத்துக்கு ஒரு நொடி முதல் தடவை மதினி கொடுத்த காப்பி வாசனை நினைவு வந்தது. வாசனை எல்லாம் எப்படி நினைவுக்கு வருகிறது? அதற்கு என்ன மூக்கு முழியா உண்டு?

சிவஞானம் மதினி கடிகாரத்தைப் பார்த்தபடி நாற்காலியை விட்டு எழுந்திருந்தாள். கையை ஊன்றி எழும்போது, துவைக்கும் போது வலது கையில் உயர்த்திவிட்டிருந்த வளையல் மணிக்கட்டுக்கு இறங்கியது
” வந்து எம்புட்டு எவ்வளவு நேரம் ஆச்சு. நாம் பாட்டில, காப்பி குடிக்கியாண்ணு கூடக் கேக்காம, ஊர்க்கதை பேசிக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்’

சிவஞானம் மதினி எழுந்து நிற்கும் போது ‘ உனக்கு நாம் போடுத காப்பி பிடிக்குமே’ என்று சிரித்தாள். மதினி சிரித்ததும், அதிக உயரம் இல்லாத அந்தத் தோற்றத்தில் நின்றபடி, ஒரு கனிந்து வரும் முதுமையின் வெளிச்சத்தோடு தன்னையே பார்த்ததும் சுந்தரத்துக்கு உள்ளுக்குள் ஒரு கொடியைப் படரவைத்தது. ஏதோ ஒரு கோவில் கல் தூணில் செதுக்கியிருந்த சிற்பக்கொடி வளைந்து வளைந்து அவன் உச்சியைத் துளைத்தபடி மேலேறிக் காற்றின் அந்தரத்தில் நுனி வளைத்து அசைந்தது.

சுந்தரம் கும்பிட்டபடியே எழுந்திருந்து, ‘ எனக்குக் காப்பி வேண்டாம். நான் புறப்படுதேன்’ என்று சொன்னான்.

‘ ஏம்? உனக்குப் பிடிக்கும் லா. அஞ்சே நிமிஷம். காப்பி குடிச்சுட்டுப் போ’ – மதினி அடுக்களைப் பக்கம் திரும்பினாள்.

‘ இல்லை. வேண்டாம். நான் வாரேன்’ என்று சொல்லும் போது சுந்தரத்துக்குக் கண் கலங்கியது.

‘ வாரேன் மதினி’ என்று மறுபடியும் கும்பிட்ட போது, கிணுங் என்று மணிச் சத்தம் கேட்டது.

சத்தத்தை வைத்துப் பார்த்தால், எஃப் சி கோடௌன் தாண்டி யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்.

One Comment on “யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்/வண்ணதாசன்”

Comments are closed.