பார்சலோனாவில் ஒரு நடனம்/ எம்.டி.முத்துக்குமாரசாமி


—-
உன் விரல்களில் முத்தமிட்டு
நடனமாட அழைக்கிறேன்
இந்த இளம் இரவின் வாயிற்கதவில்
நீ என் தோள்கள் பற்றி இசைகிறாய்
கண்களில் குறும்பு மின்ன
நீரூற்றின் கல்குளத்தில் வாத்துகள்
மந்தகதியில் நீந்த நம் தொடைகள்
உரச பார்சலோனா ஜிப்ஸி பாடல்கள்
ஆர்கெஸ்டிராவின் செல்லோவை நின்றபடி
வாசிக்கிறான் ராட்சசனொருவன்
என் இடது தோளில் முகம் புதைய
என் வலது தோளில் கை அழுந்த
உன் பெயர் என்னவென்று நானும்
என் பெயர் என்னவென்று நீயும்
கிசுகிசுத்து பொய்யுரைக்கையில்
உச்சஸ்தாயியை எட்டுகிறாள் பாடகி
உன் இடுப்பை இறுக்கி உச்சி முகர்கையில்
கைவிலக்கி சுழன்று திரும்புகிறாய்
மீண்டும் முகத்தோடு முகம் பார்க்கையில்
உன்மத்தத்தில் சீறுகின்றன நம் கண்கள்
யார் நீ யார் நீயென உதடுகள் கவ்வ
நம் நாவுகள் துழாவி விசாரிக்கின்றன
என் தோள்கள் விடுத்து
ஏழு நிமிட காலாதீதமளித்து
முலைகள் விம்ம இடை ஒசிய
முடிவிலியாய் நீ விலகிச் செல்கிறாய்
என்றுமே எனக்குத் திரும்பக்
கிட்டாத காலத்தின் சௌந்தர்யமாய்