அமெரிக்க மாப்பிள்ளை – நாகேந்திர பாரதி


‘ஒரு மாதம் உன்னைப் பார்க்காம ரெம்பக் கஷ்டமா இருந்துச்சு நளினி ‘ . கண்கள் கலங்க குரல் கம்ம பேசும் குமாரைப் பார்க்க பாவமாய் இருந்தது நளினிக்கு. இவனிடம் எப்படிச் சொல்வது. போன மாதம் பெண் பார்க்க வந்த நியூயார்க் மாப்பிள்ளை வசந்த். அவன் விவரித்த நியூயார்க் வாழ்க்கை இவளைக் கனவுலகில் பறக்க வைத்தது.

சென்ட்ரல் பார்க்கிலும், பிராட்வே தெருவிலும், உயர்ந்த கட்டடங்களுக்கும் அகன்ற வீதிகளுக்கும் நடுவே வசந்த்துடன் கை கோர்த்து கனவில் சுற்றித் திரிய வைத்தது. இவளது விசாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் வசந்த். ஒரு மாதத்தில் எத்தனை நடந்து விட்டது .

போன மாதம் உறவினர் திருமணம் என்றுதான் விடுப்பு எடுத்துப் போய் இருந்தாள் சேலத்திற்கு. அதே திருமணத்திற்கு வந்திருந்த வசந்த் அவளைத் தற்செயலாகப் பார்த்து விட்டு அவளின் அழகையும் சிரிப்பையும் பார்த்தே மனம் மயங்கி அவன் பெற்றோர் மூலம் சொல்லி அனுப்ப, அந்த தூரத்து உறவினர் மூலம் அவள் அப்பாவுக்கு வந்த சேதி.

அடுத்த வாரம் வீட்டிற்கு வந்திருந்தார்கள். . அவனது அமெரிக்கப் பேச்சு, ஆண்மைத் தோற்றம்,. உருவத்திற்கேற்ப அணிந்திருந்த உடையின் மிடுக்கு , செல்வத்தின் செழிப்பு. முடியாது என்று சொல்ல அவளால் முடியவில்லை. ஒரு நிமிடம் கண்களுக்குள் குமார் வந்து போனான்தான் . சினிமா போனது, கடற்கரை போனது , வாழ்க்கைப் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டது. எல்லாம் வந்து போயின. குமாரின் குடும்பம் பற்றி அவளுக்குத் தெரியும். ஏழைக் குடும்பம். விதவை அக்கா. அம்மா நோயாளி. அப்பாவும் இல்லை. இவன் நல்லவன்தான். வேலையில் அலுவலகத்தில் நல்ல பெயர். முன்னேறக் கூடியவன்தான். ஆனால், ஒரு கனவு வாழ்க்கையை நனவாக்கப் போகும் வசந்த்.

இப்போது அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் கொடுக்க வந்திருக்கும் நளினிக்கு, குமாரிடம் என்ன சொல்வது என்ற யோசனை. ‘ஒண்ணுமில்லை குமார், உடம்புக்கு முடியலை . அதுதான் வேலை பார்க்க வேணாம்னு அப்பா சொல்லிட்டாரு. அதான், ரிசைன் பண்ணலாம்னு ‘ .

‘அது சரி.நான் சேலம் வந்து உங்க அப்பாவைப் பார்க்கலாமா ‘.

‘அய்யய்யோ, அதெல்லாம் வேணாம் ‘ என்று அவசரமாய் மறுத்தாள் நளினி.

‘என்னாலே இனிமே முடியாது நளினி, இந்த ஒரு மாசம் , நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். நீ இல்லாம , என்னாலே வாழ முடியாது , எங்க வீட்டிலே சொல்லிட்டேன், ‘சரின்னுட்டாங்க. ‘

‘விஷயம் பெரிதாகிறது. ‘கட் ‘ செய்ய வேண்டிய நேரம் வந்தாகி விட்டது’ என்று நினைத்த நளினி யோசித்தாள் .’குமார், எனக்கு கல்யாணம் நிச்சயமாய் விட்டது , என்று ‘பட் ‘ டென்று உடைத்து விடலாமா , அல்லது ‘ எங்க அப்பா வேற இடத்திலே பார்க்கிறார் ‘ என்று மெதுவாக ஆரம்பிக்கலாமா ‘ என்று யோசனையில் இருந்தவளை அவள் தோழி மாலதி அழைத்தாள் .

‘ நளினி, மேனேஜர் கூப்பிடுறார் ‘.

‘அப்புறம் பார்க்கலாம் ‘ என்று விடுபட்ட அம்பாக விரைந்த நளினியின் வேக நடையில் தெரிந்த அலட்சியம் குமாரை உறுத்தியது .

‘என்ன ஆயிற்று இவளுக்கு, போன மாதம் கூட கடற்கரையில் கல்யாண மண்டபம் பற்றி எல்லாம் பேசினோமே ‘ குழம்பிய குமாரிடம் வந்த மாலதி .

‘குமார் , ஒரு நிமிஷம்’ . திரும்பினான்.

‘நளினிக்கு நியூயார்க் மாப்பிள்ளை அமைஞ்சிருக்கு, அவ வாழ்க்கையைக் கெடுத்துறாதீங்க. அவளுக்கும் பிடிச்சிருக்கு . ‘

தலையில் சம்மட்டியால் அறைந்தது போல் இருந்தது குமாருக்கு.

‘ அப்ப பேசினது, பழகினது , எல்லாமே ‘ அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அழுகையும் , கோபமும் கலந்து வந்தன . அடக்கிக் கொண்டான். அழுதோ, கோபப்பட்டோ என்ன பயன். தனது சீட்டுக்கு சென்று அமர்ந்தான்.

மேனேஜர் ரூமை விட்டு வெளியே வந்த நளினி இவனை நோக்கி வந்தாள் .

‘ நான் ராஜினாமா பண்ணிட்டேன் குமார்’

‘ சரி, நியூயார்க் மாப்பிள்ளையோடு சந்தோசமா இரு ‘

நிமிர்ந்து பார்த்த குமாரை நேராகப் பார்க்க முடியாமல் குற்ற உணர்வோடு தலை குனிந்தாள் நளினி . ‘ நான் செய்வது தவறா’ . ஒரு நிமிடம் தான் , ‘சரக்’ கென்று திரும்பி மாலதியோடு சேர்ந்து வெளிச் சென்றாள்.

மதியம், பியூன் மாணிக்கம் பரபரப்போடு வந்தான். ரோட்டில் கார் மோதி, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் நளினி இருக்கும் சேதி. ஓடினான் குமார். சேலத்திற்கு தகவல் பறந்தது.

மாலை ஆஸ்பத்திரியில் , அவள் அப்பா, அம்மா, வசந்த் , ஓரமாகக் குமாரும், அலுவலக நண்பர்களும் .

முகத்தில் ஏகப் பட்ட பிளாஸ்திரிகளோடு நளினி. அவளது பழைய முகம் இனி திரும்பாது. தெரிந்த வசந்தின் முகத்தில் அதிர்ச்சி . ‘ ‘கவலைப் படாதீங்க மாமா, பிளாஸ்டிக் சர்ஜெரி செஞ்சா எல்லாம் சரியாயிடும் , நான் ஊர் திரும்ப வேண்டும்’ என்று அவன் நளினியின் அப்பாவிடம் சொல்லி விட்டு விரைந்த வேகம், குமாருக்குப் புரிந்தது. அரைகுறை மயக்கத்தில் இருந்த நளினியின் வாய் முணுமுணுத்தது ‘ நியூயார்க் , நியூயார்க் ‘.

2 Comments on “அமெரிக்க மாப்பிள்ளை – நாகேந்திர பாரதி”

Comments are closed.