
கவிதா நிமித்தங்கள் நிரம்பிய
ஒரு பூரண சந்திரோதயம்
வீறெட்டெழுந்தது நேற்று
நானோ அதைத் தவறவிட்டு
பக்கத்து வீட்டு
மொட்டைமாடியில்
சிறுமி தன் நாய்க்குட்டியிடம்
விளையாடுவதை லயித்துப்
பார்த்திருந்தேன்
புதிதாய் வாங்கியிருக்கிறாள்
அது அவள் பின்னாலேயே ஓடுகிறது
பூர்ணிமை நடுக்கடலுக்கு மேல்
உருண்டோடி பட்டொளி வீசுகிறது
நெடுநேரமாய் பார்த்து நிற்கிறேனோ
சிறுமி சிணுங்கும் நாய்க்குட்டியை
இரு கைகளால் தூக்கி
என்னிடம் பெருமை பொங்க காட்டுகிறாள்
என் கட்டைவிரல் உயர்த்தி வாழ்த்துகிறேன்
நிலவும் சிறுமியும் நாய்க்குட்டியுமென
திவ்யமொன்று கூடுகையில்
அலைகளற்ற நிசப்தமாய்
அடங்குகிறது என் கடல்

ஆகா…..