வேப்பங்காற்றும் தாத்தாவும்/லாவண்யா சத்யநாதன்

தொண்ணூறு வயது வாழ்வதற்கு

கூன் குருடு செவிடில்லாமலிருப்பதற்கு

கைத்தடியில்லாமல் நடப்பதற்கு

வெள்ளிக்கிழமை பசு கன்றை ஈன்றதற்கு

நாய்ப்படை தான் வாங்கித்தரும்

பிஸ்கட்டுக்காக தன்னைத் தொடர்வதற்கு

ஒரு குழந்தைபோல் மகிழும்

தாத்தாவின் பெருமையின் உச்சம்

தாழ்வாரத்தில் நாடாக்கட்டிலில்

வேப்பங்காற்றுச் சுகத்தில் உறங்குவதும்

வைகறையில் பன்னீர்பூக்களின் வாசனையில் 

விழிப்பதும்தான். தாத்தா எத்தனைமுறை

கேட்பது வேப்பங்காற்றுப் பெருமையை என்பேன்.

உனக்கு இப்போது புரியாது. பெரியவனாகி

குளிர்ந்தகாற்றை காசு கொடுத்து வாங்குவாய் பார்

அப்போது புரியுமென்பார் எகத்தாளம் தொனிக்க.

ஒவ்வொருமுறை மின்கட்டணம் செலுத்தும் போதும்

தாத்தாவை நினைக்காமலிருக்க முடிவதில்லை.