அவசரக் கொடைக்கானல்/ நாகேந்திர பாரதி

‘போதும் கும்பிட்டது , சீக்கிரம் வாங்க ‘ .குறிஞ்சி ஆண்டவர் கோவில் வாசலில் இருந்து கேசவனின் கத்தலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம் .மனைவி விசாலம், மகன் குமார், முதிய பெற்றோர் .அன்று அதிகாலை மதுரையிலிருந்து பஸ்சில் கொடைக்கானலுக்குக் கிளம்பியதிலிருந்து கேசவனுக்கு அவசரம்தான். சீக்கிரம் முடித்துவிடவேண்டும்.

கோடை விடுமுறைக்கு எங்காவது வெளியில் போக வேண்டும் என்று ஆரம்பித்தது குமார் தான். அதற்கு அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த பெற்றோர் . விசாலமும் தான் , அடுப்படியில் இருந்து ஹாலுக்குத் தான் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு இந்த விடுமுறையில் எங்காவது வெளியில் செல்ல ஆசை இருக்கும் தானே .

கேசவனுக்கு பிஎப் லோன் வர வேண்டுமே என்ற கவலை. வந்து விட்டது .அன்று வீட்டுக்குள் நுழையும்போதே ‘நாளை கொடைக்கானல் கிளம்புகிறோம்’. இந்தச் செய்திக்கு மலர்ந்த முகங்கள். துணிமணிகளை எடுத்து வைத்து அன்று இரவு அரைத் தூக்கம் தூங்கி அதிகாலை எழுந்து கிளம்பியபோது என்ன ஒரு குதூகலம் ஆனால் அது நீடித்ததா.

கோக்கர்ஸ் வாக்கில் வேகமாக நடக்க சொன்னது. சூசைட் பாயிண்ட் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு திரும்பியது. போட்டிங்கின் போது ‘சீக்கிரம் திரும்ப வேண்டும்’ என்று முணுமுணுத்தபடி இருந்த கேசவன். அவன் பெற்றோரால் அவனின் அவசரத்தை தாங்க முடியவில்லை. ஒரு முறை காமன் பாத்ரூம் ஒதுங்கிய போது வெளியில் இருந்து’ சீக்கிரம் சீக்கிரம்’ என்ற கத்தல் .

மத்தியான சாப்பாடு கூட அவர்கள் ‘அவக் , அவக் ‘ என்று சாப்பிட வேண்டியதாய் இருந்தது. ‘வீட்டுல போய் நிதானமாய் சாப்பிட்டுக்கலாம், பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் சட்டு புட்டுன்னு பார்த்துட்டு பஸ் ஏறணும்’ . அந்த குளிரிலும் வேர்த்தது விசாலத்திற்கு. ‘ஏன்தான் இப்படி அவசரப் படுத்தறாரோ , இதுக்கு பேசாம வீட்டிலேயே இருந்து இருக்கலாம்’.

குமார் சொல்லிவிட்டான் .குழந்தை, மனதில் இருப்பதை ஒளிக்கத் தெரியவில்லை அவனுக்கு. ‘எல்லாம் ஒரே நாள்ல பார்க்கணும்னா வேகமாகத் தான் இருக்கும்’ என்று புத்திமதி. இதற்கு நடுவில் எல்லா இடங்களிலும் போட்டோ எடுக்கச் சொல்லி வற்புறுத்தல் வேற. ‘ திரும்பிப் பார்க்கறப்போ சந்தோசமா இருக்கும் ‘ என்று விளக்கம் . ஆனால் காட்சிகளைத் திரும்பிப் பார்க்க விடாமல் அவசரம். எல்லோரும் ‘ஈ ‘ என்று இளித்துக்கொண்டு புகைப்படங்கள்.

திரும்பி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பின் தான் கேசவன் ஓய்ந்தான். பஸ்ஸில் திரும்பும்போது தூரத்தில் தெரிந்த மலைத்தொடர் , பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, எல்லாமே அவர்கள் அருகில் சென்று பார்த்ததை விட இப்போது மிகவும் அழகாகத் தெரிந்தன.

One Comment on “அவசரக் கொடைக்கானல்/ நாகேந்திர பாரதி”

Comments are closed.