சிட்டுக்குருவி/ஆர்கே


நெல்லிக்கனி போல தலை
கரு உளுந்துக்கள்
நெல்மணி அலகு
வெங்காயச் சருகு சிறகுகள்
சிட்டுக்குருவிகள் ஒன்றும்
விசேஷப் பறவையில்லைதான்.

கூடு கட்டிக்கொள்ளும் தானாக.
குஞ்சுகளுக்கு புழு பிடித்தூட்டும்.
தந்திக்கம்பிகளில்
வரிசையாய் அமர்ந்து
சிறு கீச்சொலித்து
வாலாட்டும்.

கூடில்லாப் பறவை
பிறகூட்டில் முட்டையிடும் பறவை
எத்தித் தின்னுமொரு பிழைப்பு
சிறகிருந்தும் பறக்காத குறை
சண்டைக்கு சிலுப்பேறுகிற கொண்டை
ராசிச் சீட்டெடுத்துப்போடுகிற
வாழ்வவலம்
இவையாவன
சிட்டுக்குருவிகள் அறிவதில்லை.

வீட்டுக் கூட்டைக் கலைத்து விரட்டுதாலலும்
கைபேசி கோபுரமுமிழ்
கதிரியக்கத் துரத்தலினாலும்
எதிர்ப்புக் குறிப்பென
எதுவும் காட்டாமல்
மௌனமாய் வெளியேறிய
சிட்டுக்குருவிகள்
எங்கே போயின?

ஒரு காலத்தில் அவை
வங்கியொன்றின்
விளம்பர தூதராயும்
உதாரண வாசகப் பறவையாயும்
இருந்ததையும்
யாரேனும் அறிந்ததுண்டோ?

எங்கோ புலம் பெயர்ந்துபோன
சாத்வீக வகை அவைகள்
நன்றாக இருக்கட்டும்.
-ஆர்க்கே…!