எஸ்.சண்முகம் கவிதை(7)

ஆழ்இருளை
யாரோ மின்சார ஒளியிட்டு பார்க்க
பாதிகனவின் கடைசி உருவம்
விடைபெற்றுவிட்டது

முன்னும் பின்னும் நடந்து
அறையை நிரப்பத் துவங்க
சிறிது சிறிதாய் நான் கரைவது
எனக்கே புலப்படுகிறது

அடுத்த அறையில் ஜபிப்பது போலொரு குரல்
சொற்கள் உருள்கின்றன
தனித்தனியாக அன்றி
மொத்தமாக கவனித்தால்
வேண்டுதல் தொனிப்பதை அறிய முடிகிறது

தனியாக யார் பெயரும்
அதில் கேட்கவில்லை
ஆனால் எல்லோர் பெயர்களும்
சேர்ந்தே ஒலிக்கின்றன

எனக்கும் அறைக்கும் நடுவிலிருந்து
விழிப்பு நெருங்கிவர
என் தோளருகில் மண்டியிட்டு பிராத்திப்பவர்
துள்ளியமாவதை சட்டென காண்கையில்
அவரது நாவிலிருந்து எழும் பெயர்களெல்லாம்
முன் அறிந்தவையே.

One Comment on “எஸ்.சண்முகம் கவிதை(7)”

Comments are closed.