
தைலாம்பாளுக்கு
டாம் க்ரூஸ் படம் என்றால் உயிர்
நல்லா நடிக்கறான்
என்பாள்
அவன் படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பாள்
அகலக் கண்ணும்
திறந்த வாயுமாய்
சொட்டு ஆங்கிலம் தெரியாமல்
வயது தொண்ணூறு ஆனாலும்
காதும் கண்ணும் துல்யம்
பேரன் முன்பே கதை
சொல்லி விடுவான்
மகனும் மருமகளும்
முதுகுக்குப் பின்
சிரித்துக் கொள்வார்கள்
பதினைந்தில் திருமணம்
கூட்டுக் குடும்ப செக்கில்
உழளல்
அரவணைப்பின்
பால பாடம் படிக்காத கண்டிப்பான
நல்ல கணவன்
இளமையில் வைதவ்யம்
நெருப்பில் தவமிருந்து
பிள்ளை வளர்ப்பு
என
பாட்டியின் கதையறிந்த பேத்தி
இவள் முகம் மலர்ந்து
டாம் க்ரூஸின் நடிப்புடன்
அவனழகையும் ரசிப்பதை
ஆதூரத்துடன்
பார்த்து நினைத்துக் கொள்வாள்
அரும்புதல் எப்பொழுதும்
அழகுதான்
