இனிக்கும் தமிழ்

டி வி ராதாகிருஷ்ணன்

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு.அதுபோல ஒரு ஒரு பொருளைக் குறிக்க பல சொல் உண்டு.

பொன்விளைந்த களத்தூரைச் சேற்ந்தவர் கவி வீரராகவர்.இவர் பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்.


அவர் எழுதியுள்ள பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன்
பூசுமென்றாள்
மாதங்கமென்றேன்
யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன்
தின்னுமென்றாள்
கம்பமா என்றேன்
நற்களியாமென்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே பாணீ

பொருள்
——————
இராமன் என்பவன் மழை போலக் கொடை வழங்கும் வள்ளல். இந்தப் புலவர் பாணர் குடியில் பிறந்தவர். அவனைக் கண்டு பாடினார். அவன் புலவருக்கு யானை ஒன்றைப் பரிசாகத் தந்தான். புலவர் யானையுடன் வீடு திரும்பினார். அவரதுமனைவி பாணி ‘என்ன கொண்டுவந்தாய்’ என வினவினாள். புலவர் யானையைக் குறிக்கும் சொற்களை ஒவ்வொன்றாகச் சொல்ல மனைவி அதனை வேறு வகையாகப்
புரிந்துகொண்டு பேசுகிறாள்.

(இந்தப் பாடலில் யானையைக் குறிக்கும் சொற்கள்
சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன)


புலவர் களபம் (யானை, சந்தனம்)
என்றார். மனைவி பூசிக்கொள் என்றாள்.

 புலவர் மாதங்கம் (யானை, மா தங்கம்)
என்றார். மனைவி (இனி நமக்குக் குறைவு ஒன்றும் இல்லை) வாழ்ந்தேம் என்றாள்.

புலவர் வேழம் (யானை, கரும்பு) என்றார். மனைவி தின்னும் என்றாள்.

புலவர்
பகடு (யானை, எருது) என்றார். மனைவி ஏரில் பூட்டி உழவு செய்க என்றாள்.

புலவர் கம்பமா (யானை, கம்பு மாவு) என்றார். மனைவி களி கிண்டி உண்ண உதவும்
என்றாள்.

புலவர் கைம்மா (கையை உடைய விலங்கு) என்றார். மனைவி (நமக்கே உணவு இல்லாதபோது யானைக்கு உணவு வழங்குவது எப்படி என்று எண்ணிக்) கலங்கினாள்
.
புலவர் களபம் என்றார் மனைவி அதை சந்தனம் என புரிந்து கொண்டாள்

மாதங்கம் என்றார் புலவர் மா தங்கம் என புரிந்து கொண்டாள் மனைவி

வேழம், கரும்பு என புரிந்து கொள்ள்ப பட்டது

பகடு என்பது எருது என்றும் ,கம்பமா..என்பது கம்பு மா என்றும்
(தும்பிக்)கைம்மா என்றதும் யானை என உணர்ந்தாள்.

தமிழ் எவ்வளவு இனிமையான..வலிமையான..வளமான மொழி