தாகத்தைத் தணிக்காத தண்ணீர்!


கு. மா. பா. திருநாவுக்கரசு


என்பா – 1:


பழம்பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலம்! 

பலமாநிலத்தோர் வந்து பார்க்கும் இடம்! 

வெகுபக்கம் கண்டுவர வாய்ப்பு இருந்தும்

மகத்துவமே அறியாத உள்ளூரார்!


என்பா – 2:


நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்! 

எத்தனை கோணம்! எத்தனை பார்வை! 

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி! 


என்பா – 3:


வாசகனின் பாராட்டற்ற எழுத்தாளனின் குமுறல்! 

ரசிகனின் போற்றுதலற்ற பாடகனின் ஆற்றல்! 

படைப்பாளியின் திறமறியாத உடையவளின் சலிப்பு! 

தாகத்தைத் தணிக்காத தண்ணீர். 


என்பா – 4:


எங்கோநான் காணும்போது என்னைக் காண்கிறாய்!

உன்னைநான் நோக்கும்போது மண்ணைப் பார்க்கிறாய்!

காலின் நகக்கண்களால் புள்ளிகள் வைத்து, 

கோலத்தை என்நெஞ்சில் வரைகிறாய்!


என்பா – 5:


எழுதுவதால் என்ன பயன் என்றறியேன்!

கணக்கெழுதி வணிகன்பின் கிழித்து எறிவான்!

கவிஞன்தன் இல்லமெங்கும் குப்பை சேர்ப்பான்! 

அசிங்கத்தைத் துடைத்தெறிவாள் ஆயா!