யோகி – இன்றொரு சேதி….


O
தபால் உறையில் அஞ்சல் தலை ஒட்டுவதிலும் யோகி காட்டிய நேர்த்தி என்ன ?
O
ஒரு அன்பர் யோகிக்கு கடிதம் ஒன்று எழுதி தபாலில் அனுப்பியிருந்தார்.
அனுப்புநர் பெறுநர் முகவரிகள் அந்த தபால் உறையில் முறையாக
எழுதப் பட்டிருந்தன. அஞ்சல் தலையும் ஒட்டப்பட்டு அஞ்சலக முத்திரையும் பதிக்கப் பட்டிருந்தது. யோகி அந்த தபால் உறையை திருப்பித் திருப்பி பார்த்தார். அந்த தபால் உறையை பிரித்து கடிதத்தைப் படிக்காமல், தமது அணுக்கத் தொண்டரிடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறும் அந்த அன்பர் வரும் போது இந்த கடித உறையைத் தம்மிடம் தருமாறும் கேட்டுக் கொண்டார்.
O
சில நாட்களுக்குப் பிறகு அந்த அன்பர் யோகியை தரிசிக்க திருவண்ணாமலை வந்திருந்தார். அணுக்கத் தொண்டரும் அந்த அன்பர் அனுப்பி, யோகி பிரித்துப் படிக்காத அந்தக் கடித உறையை ஞாபகமாக எடுத்து யோகியிடம் கொடுத்தார். தாம் அனுப்பிய கடிதம் பிரித்துப் படிக்க படாமலே இருப்பது கண்டு அந்த அன்பர் சிறிது அதிர்ச்சி அடைந்தார்.
O
யோகி அவரிடம் அந்தக் கடித உறையை திருப்பிக் கொடுத்து,
இது நீங்கள் அனுப்பிய கடிதம்தானே
என்று கேட்டார். அவர் ஆமாம் என்றார். எல்லாம் சரியாக இருக்கிறதா , சற்றுப் பாருங்கள் என்றார் யோகி.
O
அவர் அனுப்புநர் முகவரி பெறுநர் முகவரி எல்லாம் சரியாக எழுதப் பட்டிருப்பதையும், அஞ்சல் தலை ஒட்டப்பட்டு, அதன்மீது அஞ்சலக முத்திரையிடப்பட்டு தபால் யோகியின் கரங்களை வந்து அடைத்திருப்பதையும் வைத்து , எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிவித்தார். யோகி மீண்டும் ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று பணித்தார்.
அவர் மீண்டும் எல்லாவற்றையும் சரிபார்த்து, எல்லாம் சரியாக இருக்கிறது என்று உறுதிபட தெரிவித்தார்.
O
யோகி ” அஞ்சல் தலை ஒட்டியது யார்? ” என்று கேட்டார். அந்த அன்பர் தாம்தான் என்று பதில் அளித்தார். அஞ்சல் தலையில் என்ன படம் இருக்கிறது என்று யோகி கேட்டார். இந்திய தேசப்படம் என்றார் அன்பர்.
” அதை எப்படி ஒட்டியிருக்கிறோம்? “
என்று கேட்டார் யோகி.
O
அப்போதுதான் அந்த அன்பர் கவனித்தார். இந்திய தேசப்பட அஞ்சல் தலையை தாம் தலைகீழாக
ஒட்டியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார் அந்த அன்பர். ” இப்படித்தான் நாம் தேசத்தை மதிப்பதா? ” என்று கண்டித்தார் யோகி. அந்த அன்பர் யோகியிடம் மன்னிப்பு கோரினார்.
O
நமது ஒவ்வொரு செயலும் அசைவும் முறையாகவும் முழுமையாகவும் இருத்தல் வேண்டும். எந்திரகதியில் இயங்குவதல்ல வாழ்க்கை. சதா விழிப்புணர்வில் இயங்குவதே வாழ்க்கை. வாழ்வை நுட்பமாக கவனிக்கும் பார்வையை யோகி இதில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது தேசபக்தியும் இதில் வெளிப்படுகிறது.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா

One Comment on “யோகி – இன்றொரு சேதி….”

Comments are closed.