என் கட்டுரையில் ஒரு சொல்லையும் மாற்றக்கூடாது—இ.பா/அமிர்தம் சூர்யா


மார்ச் 29 அன்று சாகித்ய அகாதெமி இந்திரா பார்த்தசாரதிக்கு ஃபெலோஷிப் அளித்து கெளரவிக்கிறது. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்ச பட்ச கெளரவம் இது. ‘இலக்கியத்தில் சாகா வரம் பெற்ற படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கெளரவம்.

எல்லா இந்திய மொழிகளுக்கும் சேர்த்து மொத்தம் 21 பேர் வரைதான் ஃபெல்லோவாக இருக்க முடியும். சாகித்ய அகாதெமியின் பொதுக்க்குழுதான் இந்த கெளரவத்திற்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். ஆர்.கே. நாராயண், குஷ்வந்த் சிங், தகழி சிவசங்கரன் பிள்ளை, சிவராம் காரந்த், எம்.டி. வாசுதேவன் நாயர், அம்ருதா ப்ரீதம் போன்ற ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கே இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. 54 ஆண்டுகளில் தமிழில் இந்த கெளரவம் பெற்றவர்கள் நான்கு பேர்தான். ராஜாஜி (1969), தெ.போ. மீனாட்சி சுந்தரம்(1975), கே.ஆர்.சீனிவாச ஐயங்கார்(1985), ஜெயகாந்தன் (1996) .இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இ.பா. இந்த கெளரவம் பெறுகிறார்…என்று முகநூலில் பதிவு செய்துள்ளார் திரு மாலன் அவர்கள்.

இந்திரா பார்த்தசாரதி அவர்களை பற்றிய ஒரு நினைவு குறிப்பு—

சில இலக்கிய நண்பர்கள் எமது நூலை படித்து முடித்ததும் தொலைபேசியில் சிலாகிப்பார்கள் ஆனால் விமர்சனமாய் எழுதி தருவதில் தயக்கம் காட்டுவார்கள் ..அவர்களுக்கான தர அளவுக்கோலுக்கு அது அடங்காமலோ,அல்லது அவர்களின் குழு /சாதி /நுண் அரசியலுக்கு பொருத்தமில்லாமல் இருப்பது காரணமாய் இருக்கலாம். எதுவும் தவறில்லை..
எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதிக்கு எனது கவிதை தொகுப்பு நூல் அனுப்பி விமர்சனம் எழுதி தர கேட்டுக்கொண்டேன். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் என் கவிதைநூலுக்கு சின்னதாய் ஒரு விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தார்.பெரும்விருது பெற்றதுபோல் மகிழ்ந்தேன்..

அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ஜி..ஒரு சின்ன அபிப்ராயம்..உங்க விமர்சனத்தில்….எனது பார்வையில் அமிர்தம் சூர்யா மாபெரும் கவிஞர் என்று குறிப்பிட்டுள்ளது.அதை சிறந்த கவிஞர் என்று மாற்றிக்கொள்ளலாமா? அப்படி மாற்றி அக்கட்டுரையை இரா.எட்வின் பங்கேற்று நடத்தும் காக்கை சிறகினிலே இதழுக்கு அனுப்பலாமா?ப்ளிஸ்” என்றேன்.

அவர் சொன்னார்…எட்வினுக்கு தானே தாராளமா அனுப்புங்க..ஆனால்என் விமர்சன கட்டுரையில் எந்த ஒரு சொல்லையும் மாற்றக்கூடாது..அந்த விமர்சனம் என்னளவில் உண்மையானது என் ருசி சார்ந்தது.அதற்கு மாற்றுகருத்து இருப்பின் அது அவர்களுக்கானது என்று சொல்லி தொலைப்பேசியை வைத்துவிட்டார்.

இன்று இருக்கும் மூத்த கவிஞர்கள் எழுத்தாளர்கள் இப்படி சக எழுத்தாளனை மனம் திறந்து பாராட்டமுடியுமா? மேன் மக்கள் மேன் மக்களே.

வெற்றிமொழி வெளியீட்டகம் வெளியிட்ட எனது சிறுகதை நூலுக்கும் இ.பா தான் முன்னுரை எழுதி தந்தார் .இவையெல்லாம் என் இலக்கிய தேடலில் மகத்தான ஆவணம் .

திரு இந்திரா பார்த்த சாரதிக்கு அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்


2 Comments on “என் கட்டுரையில் ஒரு சொல்லையும் மாற்றக்கூடாது—இ.பா/அமிர்தம் சூர்யா”

  1. அன்புமிகு நண்பர் எழுத்தாளர் அழகிய சிங்கர் அவர்களுக்கு வணக்கம். உங்களின் நவீன விருட்சத்துடன் தான் 95 வாக்கில் எனது கவிதை பயணம் தொடங்கியது. நவீன விருட்சம், கணையாழி, கவிதா சரண், சுகன், கோடு ,செந்தூரம்,இதானே அக்கால கட்டத்தில் கவிதைகளுக்கான சிற்றிதழ்கள்.அக்கிருந்த வந்த நான் படைப்பாளியாய் பத்திரிக்கையாளனாய் பேச்சாளனாய் முன் நகர்ந்து நிற்கிறேன்.இப்போது 20வருடங்கள்கழித்து அதே நவீன விருட்சத்தில் ,என் நினைவலைகள்.. அப்பாடா சாகாமல் உயிரோடு இருக்கிறேன். ..என்ற பெருமிதம் வருகிறது. நன்றி நண்பரே..– அமிர்தம் சூர்யா

Comments are closed.