செ.புனிதஜோதிகவிதை

அக்கா சாலையை விரிவாக்கம்
செய்ய வரும் வேளையெல்லாம்
ஒளிந்து கொள்வாள்
லப்,டப் இசை பட்,பட் யென
மாற்றி உள்ளூர பரணிபாட வைப்பதால்…

சாலையையும் ,வீட்டையும்
சுற்றி சுற்றி வரும்
தந்தை பறவை
என்று கூடு பிரித்தெறியப்படும்
கவலையில் கீச்,கீச் ஒலியை நிறுத்தி
மயான ஊர்வலத்தை
நிகழ்த்திக் கொண்டிருப்பார்…

அம்மா சாமி அறைக்கும், வாசலுக்குமாய்
நடந்து நடந்து வீட்டை
உறுதிப்படுத்திக்கொண்டிருப்பாள்

பாட்டிஅவர்கள் அனைவரையும்
கொட்டபாக்கோடு சேர்த்து
உரலில் இடித்து கொண்டிருப்பாள்..

இதனை எதனையும்
அறியாத குழந்தை
சுதந்திர வானத்தோடு
பட்டம் விட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கும்.