மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்/லதா

எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. உண்டு தான். ஆனால் அந்த நண்பர்களையே ஒரு பெரிய நண்பர் குழு என்று என்னால் உருவாக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது எனதான் சொல்வேன். ஏனெனில் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள். ஒவ்வொருவரின் எண்ணங்களும் செயல்களும் 100% ஒத்துப்போகுமா எனில், கண்டிப்பாக இல்லை. அங்கு இங்கு, அதில் இதில் என பல வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஒரு சிறிய நட்பு வட்டத்தை கூட்டினாலே அங்கு நான் சில நேரங்களில் சங்கடத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

என் வட்டத்தில் இருக்கும் நண்பர்களில் சிலருக்கு ஒரு சிலரை ஆவதில்லை. காரணம் ஆயிரம் இருக்கலாம். நான் அது தவறு சரி என்றெல்லாம் வாதாடவும் விரும்புவதில்லை. மனிதர்கள் பலவிதம். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது, அவர் மனம் மனிதாபிமானத்துடன் இருக்கிறதா அவ்வளவு தான் எனக்குத் தேவை. என் ஒரு நண்பருக்கு என் இன்னொரு நண்பர் பிடித்தமானவராகத் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் கூட்டம் என்று வரும்போது சிலவற்றை நாம் கடந்து போக கற்க வேண்டியுள்ளது.

எனக்கு இதனால் தான் குழுவாக எதிலும் இயங்குவதில் நம்பிக்கை இல்லை. நான் தனி. மற்ற அனைவரும் தனித்தனி. ஒரு சாதாரண அரட்டை கூட்டத்திற்கே தனிமனிதர்களின் ஒவ்வாமையால் இத்தனை பிரச்னைகள் வரும்போது, ஒரு காரணத்துடன் இயங்கும் கூட்டங்களில் எனக்கே நிறைய ஒவ்வாமைகள் இருக்கும்.

நட்பு என்று வரும்போதாவது ஓரளவிற்கு ஒத்த கருத்துகள், எண்ணங்கள் இருப்பவரைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். அப்படியும் நம் ஒரு நண்பருக்கும் இன்னொரு நண்பருக்கும் ஆகாமல் போவதை காணமுடிகிறது.

அப்படியிருக்க முன்பின் தெரியாத, அறியாத பலர் இருக்கும் குழுக்களில் நாம் ஒவ்வாமைகள் பலவற்றை சகித்துக்கொள்ளும் அழுத்தங்கள் வரும். ஒன்று உள்ளே போய்விட்டு வெளியில் வர வேண்டும், இல்லை கண்ணை மூடிக்கொண்டு சகித்துக்கொள்ள வேண்டும், கூட்டத்தில் ஒருவராக இருப்பதற்கு.

என்னால் இப்படி எல்லாம் குழுவில் ஒருத்தியாக இருக்க முடிவதில்லை. தெரியாமல் எப்பொழுதோ சேர்ந்த குழுக்களில் கூட என் பங்கு என்பது எதுவும் இல்லை. குழு என்று வந்துவிட்டால் நான் ஒரு dummy piece.

மனதிற்கு ஒப்பும் நான்கு பேர் எனக்கு உடன் இருந்தால் போதும், ஒவ்வாத ஒரு கூட்டத்தில் ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க இயலாது.

இதில் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள வேண்டும். குழுவாக செயல்பட ஒரு ஒழுங்கு அதாவது ஒரு discipline வேண்டும். அது என்னிடம் அறவே கிடையாது. நான் விரும்பினால், விரும்பும் நேரம் மட்டுமே அம்மாவாகவே இருப்பேன். எந்த organised வட்டத்திற்குள்ளும் என்னால் நிற்க முடிவதில்லை.

கூட்டங்கள் எனக்கானவை அல்ல ….. இதை நான் பெருமையாகவோ, சிறுமையாகவோ சொல்லிக்கொள்ளவில்லை. இது தான் நிதர்சனம்…இது தான் நான்.

இதை எதற்காக சொல்லிக்கொள்கிறேன் எனில், நான் ஓரிரு வருடங்களுக்கு முன் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் இதே ரீதியில்….. மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்…..எந்த குழுவிற்கான அழைப்பும் எனக்கு தயவு செய்து அனுப்பாதீர்கள். அப்படி அனுப்பினாலும் நான் அவற்றை ஏற்காவிடில் தவறாக நினைக்காதீர்…..தனி மனிதராக உங்களை நான் மதிக்கிறேன். ஆனால் நான் எந்த கூட்டத்திலும், குழுவிலும் இருக்க விரும்புவதில்லை.

இதற்கும் நம் தனிப்பட்ட நட்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

One Comment on “மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்/லதா”

Comments are closed.