எஸ்.சண்முகம் கவிதை

சரியான நேரம் ஞாபகமில்லை
கைக்கடிகாரத்தை அணியாமல் கிளம்பினேன்
மேற்குமுகமாக செல்கையில்
முதுகுப்புறமாக கிழக்கு

சாலையிலிருந்து மேலெழும் தூசின் படர்வு
நிமிர்ந்து பார்த்த போது
நெடிதாய் நிற்கும் கம்பங்களின் இணைக்கோட்டில்
அந்தி ஒளிர்வட்டம் மிதப்பதை
பார்த்துக் கொண்டே செல்கையில்

மேற்கு வளர்ந்து நீள
சிரம் திருப்பி பின்னால் காணமளவிற்கு
அப்படி வசீகரம் மிகுந்ததாய்
வேறெதுவும் தென்பட வாய்ப்பில்லை
மென்மேலும் மேற்கு

என் நிழல் உடன்வருகிறதா என்று
கவனிக்காமலேயே நடக்கிறேன்
வந்தாலும் வரவிட்டாலும்
இந்நேர ரசவாதத்தின் ஒளியூட்டலில்
வியர்த்தம் மங்கித் தொலைந்துவிட்டது

எத்திசையில் இருந்தும்
நாள் உவக்கலாம்.

One Comment on “எஸ்.சண்முகம் கவிதை”

Comments are closed.