முகிழ்க்கும் இனிமை/ந.பானுமதி

எண்ணத்தில் நடந்து கொண்டிருந்தேன் சாலையில்

எதுவும் கவனத்தில் பதியாமல்

என்னிடமிருந்தே தப்பிப்பது எவ்விதம்?

சீறி வரும் கடலைகளைத்

தடுக்க பாறைச் சுவர் கட்டியும்

மோதும் அவற்றை என்னதான் செய்வது?

பெரு மூச்சுடன் நிமிர்ந்த போது

எதிர்ப் புறத்தில் ஒருவர்

கன்னங்களில் சிரிப்பைத் தேக்கி

உதடுகள் இலேசாக விரிய

இவர் யாரையோ சந்தித்திருக்கக் கூடும்

அதன் வாசம் கன்னங்களில் புன்னகையில்

இழைய கண்களும் இணைந்தன.

தேரடியில் பழைய நண்பரைப்

பார்த்திருப்பாரோ

தேநீர்க் கடையில் பழம் பொறி

சுவைத்திருப்பார்களோ

ஆற்றில் கால் நனைத்து நடந்து

வரும் உற்சாகமோ

மீள் எழும் மகிழ்வைக்

கொண்டாடும் அவரைத்

தெருத் திருப்பம் வரை

பார்த்தேன்.

ஒரு சிறுமியின் சிரிப்பொலி,

தொலைக் காட்சி விளையாட்டில்

ஒரு வீட்டின் உள்ளிருந்து

நிசப்தம் கலைத்த சப்தம்

கதம்ப மாலையை வாசல்

நிலையில் கட்டும் முதியவள்

மயில் பீலி  நறு புகை

மணத்தோடு முதியவர் ஒருவர்.

மனதில் மணத்தைச் சேர்த்த

அந்த மானுடனை மீள மீளப்பார்ப்பேன் கனவுகளிலாவது.