பாதுகாப்பு /ஆர். வத்ஸலா

விடியல் நேர சோம்பல் சுகம்.
கண் விழித்துப் படுத்திருக்கிறோம்.
மனைவியும் நானும்.
எனக்கு இது பழக்கம்,
அவளுக்கு புதிது.

நாளைக்கு என்ன காய்,
குளிலயறை குழாய்ச் சொட்டல்,
வருமான வரித் துறையிலிருந்து
அவளுக்கு வந்திருக்கும் குழப்பமான கடிதம்,
நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல்
பள்ளியிலிருந்து திரும்பும் பையன்,
காப்பகத்தில் லட்சிய குழந்தையென பெயர் வாங்கிய பெண்
வீட்டில் அடிக்கும் லூட்டி.

இவையெல்லாம் மறந்து
லேசாக என் தோளில் தலை தொட,
அவளின் சற்றே திறந்த விழிகளில்,
மிதக்கிறது ஒரு கனவு,
உருவாக மறுத்துக்
கொண்டு.

என் மௌனம் நிற்கிறது,
அதை பாதுகாத்தபடி.

( விருட்சம் நிகழ்வில் வாசித்த கவிதை.25.03.22).

2 Comments on “பாதுகாப்பு /ஆர். வத்ஸலா”

Comments are closed.