கண்டு கொண்டேன் ..!/இந்திரநீலன் சுரேஷ் 

லண்டனின் இதமான குளிர் காற்றை கிழித்தவாறே… ‘ஹான்ஸ்லோ’ ஸ்டேஷனுக்குள் ‘பிகாடெலி’ நுழைந்தது.

தினம், இதே நேரம் என் பாஸ்..ஸுடன் அலுவலகம் பயணிப்பேன். 

ட்ரெயின் கதவுகள் மெல்லத் திறக்க , ‘அவளை’ முதலாவதாகப் பார்த்த நொடியில், சின்ன மின்னல் கீற்றாகப் புன்னகையை வீசினாள்.. 

முதியோர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த இளைஞன், என் தேகக்கட்டையும் , ஆளுமையும் பார்த்ததும் என் வயசான பாஸ்..க்கு இடம் விட்டான். நான் கம்பியோரம் சாய்ந்து நின்றேன்..

‘அவள் இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!’ – ரோஜாவின் இளமொட்டு அப்போதுதான் விரிந்தாற்போல்.. அப்படி ஓர் அழகு..

‘அந்தத் தடக்..தடக்..சப்தம் வண்டி விரைவாக ஓடுவதாலா .. இல்லை என் இதயத்திலிருந்தா..?’

‘ஆக்டன் டவுன்’ தாண்டி , கிரீன் பார்க் வர , நாங்கள் இறங்க வேண்டியிருந்தது.. அவள் என்னருகே வந்து சற்றும்  எதிர்பாராமல் குனிந்து என் கழுத்தை வருடி… அனைவரும் பார்க்க, நெற்றியில் முத்தமிட்டாள்..

என் சிலிர்ப்பு அடங்குவதற்குள், கண் பார்வை குறைந்த என் பாஸ், எழுந்த வண்ணம் எனது கயிற்றை இறுக்கிப் பிடிக்க, நாலு கால் பாய்ச்சலாக ட்ரைனிலிருந்து குதித்தேன்..

அவள் என்னை நோக்கி காற்றில் முத்தமிட்டபடி , பக்கத்தில் இருப்பவரிடம் சொன்னாள் ..’ இது போலத்தான்  பயிற்சி பெற்ற நாய் ஒன்னு என் அப்பாக்காகத் தேடிக்கிட்டு இருக்கேன்..’  

4 Comments on “கண்டு கொண்டேன் ..!/இந்திரநீலன் சுரேஷ் ”

Comments are closed.