
நாதாங்கியை இழுத்துப்போட்டு சங்கிலியைக் கோர்க்கும் சப்தம் கேட்டது ஆண்டிக்கு. . அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுக்க மரங்கள். அரச மரங்கள் , ஆல மரங்கள் , வேப்ப மரங்கள். அகன்ற ஒரு ஆலமரத்தின் கிளையில் பதுங்கி கிடக்கும் ஆண்டிக்கு ஆசைத்தீ.
கோவிலின் உட்பிரகாரக் கதவைப் பூட்டும்போது மணிகளை இழுத்துப் பிடிக்க , அவை அடித்து ஓய்ந்தன. ஆச்சு .இன்னும் கொஞ்சநேரம் .பூசாரி வெளிப்பிரகாரக் கதவையும் பூட்டிவிட்டுப் போய்விடுவார்.. அந்த கோவிலின் இருட்டுக்குள் ஆண்டி மட்டும். இடுப்புக் கயிற்றுக்குள் இறுக்கியுள்ள சாவிக்கொத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். அம்மனின் கழுத்தில் ஜொலித்த நகைகளை நினைத்துக் கொண்டான். அவன் கண்கள் விரிந்தன.
வெளிப்பிரகார மரக்கதவு ‘கரபுர’ சத்தத்துடன் சாத்தப்பட்டு ‘டுய்ங்’ சத்தத்தோடு பெரிய பூட்டு வெளியே பூட்டப்பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து இருந்தான். ‘கரகர’ சத்தத்தோடு பூசாரி ஏதோ அம்மன் பாட்டை முனகியபடி சுவர் ஓரமாக நடந்து போனான் . மெதுவாக உரசி தவழ்ந்து வந்து ஆலமரத்தின் விழுதுகளைத் தடவிப் பிடித்து மெதுவாகத் தரையில் கால் பதித்தான். இலைகள் ‘கசகச ‘ என்று நசுங்கின.
பிரகாரத்தின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருக்கு அருகே எரியும் தீபத்தின் திரியை கசக்கினான் .கசங்கிய திரியின் எண்ணை வாசம் அந்த இடத்தில் பரவியது. முழுவதும் இருட்டு. கொஞ்சம் பொறுத்து இருந்து இருட்டு லேசாகப் பழகியதும் நடந்தான். உட்பிரகாரத்தில் தொங்கும் பெரிய பூட்டுக்குள் ஒரு சாவி ‘மடக்’ என்றது. மெதுவாக பூட்டோடு சேர்ந்த சங்கிலிகளைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு நுழைந்தான் .
பிரகாரத்தில் ஏதோ ஒன்று காலின் ஓரம் ‘வழுவழு’ என்று நகர்ந்தது. வெளியே காற்றில் உரசும் இலைகளின் ‘சரசர ‘ சப்தம். இரவுப் பூச்சிகளின் ‘யுய்ங்’ சத்தம். கல் தரையில் கால் தேய்த்து நெருங்கியவன் பார்த்தான். ‘அங்கே , பழகிய மெல்லிய வெளிச்சத்தில் , நடு நாயக கருப்புச் சிலை, சிவப்புச் சேலை .அதன் கழுத்தில் அந்த நகைகள். அம்மனின் கண்களில் வெள்ளையாக ஏதோ ஒரு ஒளி. ஒரு நிமிடம் தயங்கினான்.
ஒரு நிமிடம் தான் .அடுத்த நொடியில் அவன் கைகளில் அந்த நகைகள். அவற்றைச் சுற்றி இடுப்புப் பையில் இறுகக் கட்டிக்கொண்டான். கோவில் சுவர் ஓரமாக யாரோ நடந்து வரும் ஓசை. ‘சரசர’ ஓசை .பூசாரி, அம்மன் பாட்டை முணுமுணுத்தபடி. ‘மறுபடி ஏன் வருகிறான்’. உள்ளேயே அம்மனின் பின்னால் போய் ஒளிந்து கொண்டான். . . அந்த பெரிய சிலை அவன் உடம்பை மறைக்கப் போதுமான அளவு உள்ளது .
வெளிப் பிரகாரக் கதவு திறக்கப்பட்டு நுழையும் சத்தம். பூசாரி மூலைப் பிள்ளையாரிடம் சென்றான். . ‘பிள்ளையார் தீபத்தை அணைச்சுட்டுத்தான் போனேனா , என்ன மறதி ‘ என்று முணுமுணுத்தபடி திரும்பியவனால் உட்பிரகாரக் கதவு திறந்து இருப்பதை உணர முடிந்தது. ‘பூட்ட மறந்துட்டேனா ‘ என்றபடி நெருங்குகிறான். கீழே கிடக்கும் சங்கிலி, பூட்டைப் பார்த்ததும் புரிந்து கொண்டான்..
‘ உள்ளே திருடன்’. டார்ச் லைட்டை அம்மன் சிலை மேல் அடித்தான் .கழுத்தின் வெறுமை உறுதிப்படுத்தியது. ‘போய்விட்டானா இருக்கிறானா ‘, டார்ச் ஒளி உள்ளே சுற்றித் தொடர்ந்தது.. காணோம். ‘என்ன செய்வது , சத்தம் கொடுத்தாலும் கேட்பதற்கு யாருமில்லை’ . ஊருக்கு ஒதுக்குப்புறமான கோயில் .
பெருமூச்சு சப்தம் கேட்க முடிந்தது. எங்கே. உற்றுக் கேட்டு உணர்ந்தான். சிலையின் பின்னே இருந்து. என்னதான் வெறி வந்ததோ. பாய்ந்து ஓடி, சிலைக்குப் பின்னே கை விட்டு இழுத்துப் போட்டுக் குத்தி , டார்ச் லைட்டை அடித்துப் பார்த்ததில், . ‘ ஆண்டி நீயா’ என்ற பூசாரி முகத்தில் இடி இறங்கியது. .ஆண்டியின் முழங்கை முட்டி அவன் மூக்கில் ரத்தம் கக்க, பூசாரியும் திருப்பித் தாக்க, கட்டிப் புரண்டு பிரகார வாயிலில் உருண்டு வந்தார்கள்.
இலைச் சருகோடு சேர்ந்து அடித்துப் புரண்டு, அப்போது ஆண்டியின் கை பட்ட இடத்தில் ஏதோ நசுக்கப்பட , அது ‘ சரக்’ கென்று அவன் கையில் பதித்துச் செல்ல, அவன் துடிப்பதைப் பார்த்து விலகிய பூசாரிக்குப் புரிந்தது. திரும்பிப்பார்த்தான். அம்மனின் பாம்புக் கண்கள் பளபளத்தன.

சிறப்பான கதை. இயல்பும் தெய்வீகம்
எதிர்பார்த்த முடிவு.