
பகல்பொழுதில் ஆள்அரவமற்ற அச்சாலையை
நீதான் தேர்ந்தெடுத்தாய்.
கொன்றை மரங்கள் நிரம்பிய
அச்சாலை…மஞ்சள் பூக்களை
உதிர்த்து உன் வருகைக்கு
கட்டியம் கூறி நிற்கும்.
என்றும் நமக்கு பழக்கமான அம்மரத்தடியில்…நீ மட்டும்
பேசிக்கொண்டிருப்பாய்…
நான் உன் விழிநடனத்தை
வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்பேன்.
உனக்கான பூச்சொரிதலை
நிகழ்த்த…கிளைகளை பற்றி
குலுக்குவேன்.
பூக்களெல்லாம்
உன்னைத்தீண்டிய பெருமிதத்தில் மண்ணில் உதிர்ந்த பின்னும்…மீண்டும்
கிளைநோக்கிப்பாய ஏங்கும்.
ஒரு மாலைநேர பிரிதலுக்குப்பிறகு நீ வரவில்லை…
உன்னைத்தொட்ட மலர்களை
சேகரித்து தலையணையாக்கி இருக்கிறேன்…உறக்கம்தான்
வருவதில்லை.
மௌனங்கள் உதிரும் அச்சாலைக்கு இப்போதும் போய்த்தான் வருகிறேன்…
நமக்கு பிரியமான கொன்றை
மரம் இப்போதெல்லாம் பூப்பதே இல்லை

சங்ககாலக் கருத்து. அருமை