
நவீன விருட்சம் ஆசிரியர் அழகியசிங்கரை எனக்குப் பத்து பன்னிரெண்டு வருடங்களாகப் பழக்கம். அவரது இடைவிடாத ய பங்களிப்பு வியக்க வைப்பது. அசோகமித்திரன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சிங்கருக்கு அசோகமித்திரன் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் அளவிடமுடியாதது. கிண்டிலில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிப் படித்தேன் – எளிய நடையில், உணர்ச்சி மிக்க மரியாதையுடன் சிங்கர் எழுதியுள்ள இப்புத்தகத்தை நான்கு மணிநேரத்தில் என்னால் வாசிக்க முடிந்தது! மறைந்து விட்டாலும், அசோகமித்திரனுடன் இனிமையாக ஓர் உரையாடலில் சிங்கருடன் இணைந்து கொண்ட அனுபவமாக இருந்தது இந்தப் புத்தக் வாசிப்பு!
20 கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 13 கட்டுரைகளில் அசோகமித்திரனைச் சந்தித்தது, அவருடன் இலக்கியக் கூட்டங்களுச் சென்றது, திருமணங்களுக்குச் சென்றது, அவரது சில விசேஷமான குணங்கள் எனத் தான் அறிந்த எழுத்தாளுமையைப் பற்றி மிக எளிமையான நடையில் சொல்கிறார். அவரே சொல்வதுபோல், பல ஆண்டுகளாக அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், பல ஊடகங்களில் வெளி வந்தவை – சில செய்திகள், திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு தொகுப்பாக வெளியிடும்போது, ‘காபி எடிட்டிங்’ – திரும்பத்திரும்ப வரும் செய்திகளை எடிட் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சுவாரஸ்யம் குறையாமல் வாசிக்க அது உதவும் என்பது என் எண்ணம்.
2017 ஜூன் மாதம் சாகித்ய அகாதமி கூட்டத்தில் அசோகமித்திரனைப் பற்றிப் பேசியதைக் கட்டுரை வடிவில் கொடுத்திருக்கிறார், சிங்கர். அசோகமித்திரனை எவ்வளவு கொண்டாடுகிறார் சிங்கர், என்பதற்கு இந்த ஒரு கட்டுரையே போதுமானதாக இருக்கிறது!
‘கல்கண்டு’ வாசிக்கத் தொடங்கியதிலிருந்து, ‘வாழ்விலே ஒரு முறை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்து, அதன் பிறகு அசோகமித்திரனைத் தேடித் தேடி வாசித்ததைச் சொல்கிறார். அவரது ‘ரிக்ஷா’ கதையில் வரும் “உலகம் ஒரு க்ஷண காலம் அசைவுற்று இருந்தது” வரியை வாசித்து அசந்து விடுகிறார். குறும்படமாகவும் எடுக்க ஆசைப் படுவதாகச் சொல்கிறார்.
முதல் சந்திப்பில் சிங்கர் அவரைப் பார்த்து, “ நிங்கள்தானே அசோகமித்திரன்?” என்கிறார். அதற்கு அசோகமித்திரன் கோபமாக, “நான் யாராக இருந்தால் என்ன உங்களுக்கு?” என்று திருப்பிக் கேட்கிறார். சிங்கர் கோபப் படவில்லை – ‘அசோகமித்திரன் மீதிருந்த பிரமிப்பு – அடங்காத பிரமிப்பு, அவரது எளிமையான எழுத்தின் வசீகரம், சொல்வது போல வந்து சொல்லாமல் நழுவும் தன்மை’ – அவரைக் கட்டிப் போட்டுவிடுகிறது!
சிங்கரது குறுநாவல் கணையாழியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது – தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன்! மகிழ்ச்சியில் தொடர்ந்து எழுதத் துவங்கினேன் என்னும் சிங்கர், அசோகமித்திரனை ‘உ ண்மையில் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர். எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்’ என்கிறார்.
கதை எழுத விரும்புபவர்கள், எல்லா எழுத்தாளர்களுடைய கதைகளையும் வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்காமல், கதை எழுதிக்கொண்டுவரும் புதிய கதைகளை சிங்கர், தான் நிராகரித்துவிடுவதாகச் சொல்கிறார். இதே கருத்தை எழுதாளர் சுஜாதாவும் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். புதிதாக எழுதுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் இது.
பெண்கள் துயரத்தை அசோகமித்திரன் சிறப்பாக வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டு, அதற்கு உதாரணமாக ‘விமோசனம்’, ‘தண்ணீர்’ கதைகளைக் குறிப்பிடுகிறார்.
‘ஐந்து ரூபாய்க்கு ஒரு மிளகாய் பஜ்ஜியை விற்பவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்’ என்பாராம் அ.மி. அவரது மறைவுக்குப் பிறகு, மிளகாய் பஜ்ஜி வாங்குவதற்கோ, அதை எடுத்துக்கொண்டு தி.நகர் செல்வதற்கோ வாய்ப்பில்லை என்று சொல்லும் சிங்கரின் வருத்தம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.
85 வயதிலும், வைத்தீஸ்வரன் வீட்டுத் திருமண வைபவத்திற்கு அ.மி. வந்ததையும், இலக்கியக் கூட்டங்களுக்கத் தவறாமல் செல்வதையும் விவரித்து வியக்கிறார் சிங்கர்.
மரணம் குறித்த பயமின்றி, அதைப் பற்றி பேசிக்கொண்டே, எப்போதும் எதிர்கொண்டபடி இருந்தவர் அசோகமித்திரன் – இறுதி வரை கதை, கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். “ஒரு சாதாரண மனிதர். அவருடைய சாதாரண அனுபவம் கூட கதையாக முளைத்து விடுகிறது. அவர் கதைகள் அவரைச் சுற்றி சுற்றி வந்த வண்ணம் இருக்கின்றன” என்னும் சிங்கரின் வார்த்தைகளில் உண்மையிருக்கிறது.
அசோகமித்திரன், கவிஞர் வைத்தீஸ்வரன் பற்றிய கட்டுரை இரண்டு பெரும் ஆளுமைகளைப் பற்றிப் பேசுகிறது – இருவருக்கும் வயது வித்தியாசம் ஐந்து வருடங்கள், ஆனால் பிறந்த தேதியும், மாதமும் ஒன்றேதான்!
‘அழகிய சிங்கர்’ புனைப் பெயர், அசோகமித்திரனின் நகைச்சுவை, வெங்கட் சுவாமிநாதனுடன் ஆன வித்தியாசமான நட்பு, தி நகரில் அ.மி. வாழ்ந்த தாமோதர ரெட்டித் தெரு, ஐராவதத்தின் மீது அ.மி.க்கிருந்த மதிப்பு, அ.மி., சிங்கரின் வீட்டுக்கு இரு முறை வந்தது என நினைவோடைப் பதிவுகள் எல்லாம் சுவாரஸ்யம்.
காந்தி, இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை, கரைந்த நிழல்கள், மானசரோவர், தண்ணீர், புலிக் கலைஞன், இந்தியா 1948, நடைவெளிப் பயணம் ஆகிய அசோகமித்திரன் படைப்புக்களைக் குறித்து, சிங்கர் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரைகள் சிறப்பு.
“இரண்டுவிதமாகப் பார்க்கலாம். அவருடன் எனக்கேற்பட்ட நேரிடையான தொடர்பு – அவருடைய படைப்புகள் மூலம் நானறிந்த அசோகமித்திரன்.”
“ஒரு வாசகனாக அவர் படைப்புகளைப் படித்து ரசிப்பவன். ஒரு சிறுகதையை முடிக்காமல் முடிப்பது அவர் பாணி. அவரிடம் ஒரு ஏகலைவனாக இதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கதையை வாசகனிடத்தில் முடிப்பது அவர் பாணி”.
“அசோகமித்திரன் மீது எனக்கு அலாதியான மரியாதை. மதிப்பு”
முன்னுரையில் சிங்கர் சொல்கின்ற மூன்று விஷயங்களும், இந்தப் புத்தகத்தின் சுருக்கமான அறிமுகமாகக் கொள்ளலாம்!
