எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

ஏதேனும் ஒரு சுத்திகரிப்புக்கு
உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா என வினவுகிறாய்
வண்டலும் வனமுமல்லவா
அழகு என வியக்கிறாய்
இப்படியெல்லாம்
கேள்விகளும் அவாக்களும்
எதிரும் புதிருமாகையில்
ஏன் எங்காவது ஒரு பாத்திரம்
சதா கை தவறி விழுகிறது
சுழற்சியின் வேகம் குறைந்த
மின்விசிறியின் துண்டாடிய ஓசை போல்ஃ
போர்ச்செய்திகள் நிறைந்த
சாயுங்காலத்தின் ரேகைகள்
ஏன் கடலிறங்குகையில்
காலடியில் மண் புதையும் உணர்வை
உண்டாக்குகின்றன
மீண்டும்
பளிங்கின் பரிசுத்தமாய்
நிச்சலனம் கொள்ளும்
நீருக்காய் தவிக்கிறாய்
அது கிடைக்கும் வழியின்றி கேவுகிறாய்