
விருது விழாவின் இரண்டாம் நாளான இன்று விருது பெற்ற அனைவரும் எங்களுடைய ஏற்புரையை நிகழ்த்தினோம். பலரும் தங்கள் தாய்மொழியிலேயே உரையாற்றினார்கள். நானும் தமிழிலேயே பேசினேன். பேசிய பெரும்பாலானவர்களின் உரைகளை ஆங்கிலத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்திருந்தார்கள்.
இன்றும்கூட பெரிய கூட்டம் வரவில்லை. கல்லூரி மாணவர்கள் சிலரை பார்வையாளர்களாக உக்கார வைத்திருந்தார்கள். அழகன் படத்தில் மம்முட்டி சொல்லும் உப்புமா கதை நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை. வேலை நாளொன்றின் காலைப் பொழுதென்பதால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆங்கிலத்துக்காக விருதுபெற்ற மேகா மஜூம்தார், அமெரிக்காவிலிருப்பதால் அவர் சார்பாக அவரின் தந்தையே உரையை வாசித்தார். மேகா ‘A Burning’ என்ற தன்னுடைய முதல் நாவலுக்காக இவ்விருதைப் பெற்றிருக்கிறார். அந்நாவல் இதுவரை 11 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. வாசிக்க வேண்டும்.
இன்றைக்கு அவர் உரையாற்றும்போதுதான் கவனித்தேன், குஜராத்தி மொழிக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்ற திராஸ்தி சோனி பிறந்தது 2000 ஆம் ஆண்டு. தன் இருபத்தியோராம் வயதில் அதுவும் தான் எழுதிய ‘அ-மானஸா’ என்ற நாவலுக்காக பெற்றிருக்கிறார். பெரிய விசயம்!
மலையாள எழுத்தாளர் மொபின் பேசும்போது, ‘பெரியார் பிறந்த மண்ணில் விருதுபெறுவதில் மகிழ்ச்சி’ என்று ஆரம்பித்தார். ஒரு சில வாக்கியங்களை தமிழில் பேசியது அழகாக இருந்தது.
நேற்றே நிகழ்வுக்கு வந்த அனைவருக்கும் விருது பெறும் எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பற்றிய இரண்டு பக்க குறிப்புகளை, அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களோடு அச்சிட்டு ஒரு அழகிய புத்தகமாகக் கொடுத்திருந்தார்கள். அழகாக வடிவமைக்கப்பட்ட உபயோகமான புத்தகம்.
இன்றைய நிகழ்வின் மிக முக்கியமான உரை என்று மணிப்பூரிக்காக விருதுபெற்ற லெனின் குமாச்சாவுனுடையதையே கூறுவேன். மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களில் இனவெறியுடன் பார்க்கப்படுவது குறித்தான தன் ஆதங்கத்தையும் மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் AFSPA Act பற்றிய தன்னுடைய வருத்தத்தையும் தன் உரை வழியே தைரியமாக முன்வைத்தார். அதுவும் குறிப்பாக பிற மாநில எழுத்தாளர்கள் நிறைந்திருக்கும், மத்திய அரசு நிறுவனமான சாகித்திய அகாடமியின் அவையில் இது உரிய கவனம் பெறும் என்ற தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். உரை முடிந்ததும் அவரிடம் சென்று பேசினேன். அவ்வுரையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதியும் பெற்றுக்கொண்டேன். என்னால் இயன்றது.
நேற்றும் இன்றும் வந்திருந்த நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஷ்ருதி டிவியின் கபிலன் மற்றும் சுரேஷுக்கும் நன்றியும் அன்பும்!

O
