இனிக்கும் தமிழ் – 113/ டி வி ராதாகிருஷ்ணன்

நறுந்தொகை

       தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
         தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
         நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
         அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
         மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

(பதவுரை)

ஆலின் – ஆலமரத்தின்,
தெள்ளிய – தெளிந்த,
சிறு பழத்து – சிறிய கனியிலுள்ள,
ஒரு விதை – ஒரு வித்தானது,
தெள் நீர் – தெளிந்த நீரையுடைய,
கயத்து – குளத்திலுள்ள,
சிறு மீன் – சிறிய மீனினது,
சினையிலும் – முட்டையைக் காட்டிலும்,
நுண்ணிதே ஆயினும் – சிறியதே யானாலும்,

(அது),
அண்ணல் – பெருமை பொருந்திய,
யானை – யானையும்,
அணி அலங்கரிக்கப் பட்ட,
தேர் – தேரும்,
புரவி – குதிரையும்
ஆள் – காலாளும் (ஆகிய),
பெரும் படையொடு – பெரிய சேனையோடு,
மன்னர்க்கு – அரசருக்கும்,
இருக்க – தங்கியிருப்பதற்கு
நிழல் ஆகும் – நிழலைத் தரும்.

சிறிய ஆலம்பழத்திலுள்ள விதையானது சிறிய மீனின் முட்டையைப் பார்க்கிலும்
சிறியதாயிருப்பினும் அது முளைத்து வளர்ந்து நால்வகைச் சேனையுடன் கூடிய
அரசரும் தங்கியிருக்க நிழலைத் தரும்.

உருவத்தாற் சிறியவரெல்லாம் சிறுமையுடையவராகாது பெருமையுடையவருமாவர்
என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தெள்ளிய பழத்து என்றும்,
விதை நுண்ணிதேயாயினும் என்றும் கூட்டிக்கொள்க. அது முளைத்து வளர்ந்து
நிழலாகும் என விரித்துக்கொள்க. மன்னர்க்கும் என்னும் உம்மை தொக்கது.
நிழலாகும்மே என்பதில், ம் : விரித்தல் விகாரம்; ஏ : ஈற்றசை

                 -