வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்: ஏப்ரல் 2/திருப்பூர் கிருஷ்ணன்

.*வரகநேரி வேங்கடேச சுப்ரமண்ய ஐயர் என்பதன் சுருக்கமே வ.வே.சு. ஐயர் என்பது.

தாய் காமாட்சி அம்மையார். தந்தை வெங்கடேச ஐயர். பிறந்த தினம் 2.4.1881.*ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. அவரின் அத்தை மகள். *மைத்துனர் பசுபதி ஐயரோடு ரங்கூன் சென்றார். பின் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்.

`அபிநவ பாரத்` என்ற ரகசிய சங்கம் நடத்தினார். லண்டன் வாழ் இந்திய இளைஞர்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டினார். *இங்கிலாந்தில் வ.வே.சு. ஐயர் தங்கியிருந்த காலம். அவரைப் பிடிக்க ரகசியப் போலீஸ் முயல்வது அவருக்குத் தெரிந்தது. கையில் ஒரு சூட்கேசோடு தாம் தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியேறினார். அவரை மறித்தது ரகசியப் போலீஸ். அவரைக் கைது செய்வதற்கான உத்தரவு அடங்கிய உறையைக் கையில் கொடுத்தது. அதில் வ.வே.சு. ஐயர் என்ற பெயரைப் பார்த்து `அவர் உள்ளே இருக்கலாம். போய்ப் பாருங்கள். அது நானல்ல` என்றார் அவர். ரகசிய போலீஸ் அவர் கையில் இருந்த சூட்கேசில் வி.வி.எஸ் என எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி அது வ.வே.சு. ஐயரின் சுருக்கம்தானே என்றது. கடகடவெனச் சிரித்தார் ஐயர்.

`என் பெயர் வி. விக்ரம் சிங். அதன் சுருக்கம் இது` என கம்பீரமாகச் சொல்லிவிட்டு நிதானமாக வெளியேறினார். பின் கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார்.

*லண்டனில் தாம் தங்கியிருந்த இந்தியா ஹவுசில் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாகக் கொண்டாடினார். அதில் நடைபெற்ற விருந்துக்கு காந்தியை அழைத்தார். அவரைத் தவிர வேறுயாரும் காந்தியைப் பார்த்ததில்லை.

காந்தி தாம் காந்தி என்பதை மற்றவர்களிடம் தெரிவித்துக் கொள்ளாமல் சமையல் பாத்திரங்களைத் துலக்கி உதவினார். *இந்தியா ஹவுசில் வ.வே.சு. ஐயர் துப்பாக்கி சுடப் பயிற்சி பெற்றார். பல இளைஞர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுத்தார். (பின்னாளில் வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடப் பயிற்சி அளித்தவரும் இவர்தான். பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப் படும் கருவடிக் குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.) *

வ.வே.சு. ஐயர் லண்டனிலிருந்து பாரீஸ் போனார். முஸ்லீம் வேடத்தில் மெக்கா சென்று பின் அங்கிருந்து பம்பாய் வந்தார். பின் பிரஞ்சு அரசு நடந்துகொண்டிருந்த புதுச்சேரி வந்துசேர்ந்தார்.

ஸ்காட்லாண்ட் ரகசியப் போலீசுக்குத் தாம் இருக்கும் இடத்தைத் தெரிவித்து `இனிமேல் அவரைப் பிடிக்க முடியாது, வீணாய்த் தேடிநேர விரயம் செய்ய வேண்டாம்` எனத் தந்தியடித்தார்!

*வ.வே.சு. ஐயர் தம் நண்பர் வீட்டிலிருந்து தப்பிக்க பிணமாக நடித்தார். அது யாரோ ஒருவருடைய சடலம் எனக் காவல்துறை கருதியது! தம்மை மயானத்திற்குக் கொண்டுசெல்லுமாறு ஏற்கெனவே நண்பர்களிடம் கூறியிருந்தார். அவர் சொன்னபடியே அசைவற்றுப் படுத்திருந்த அவரைச் சுமந்துகொண்டு மயானம் சென்றார்கள் நண்பர்கள். அங்கிருந்து குதித்து ஓடித் தப்பிச் சென்றுவிட்டார் வ.வே.சு. ஐயர்!

இப்படி வ.வே.சு. ஐயர் செய்த சாகசங்கள் இன்னும் எத்தனையோ உண்டு. *அரவிந்தருடன் பாரதியும் இவரும் இணைந்து தியானம் பழகினார்கள். நாத்திகராக அறியப்பட்ட வ.ரா.வும் கொஞ்சகாலம் அங்கிருந்தது உண்டு. (வ.ரா. கடைசி நாட்களில் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டிருந்தது பற்றிய குறிப்பு கு. அழகிரிசாமி எழுதிய `நான் கண்ட எழுத்தாளர்கள்` என்ற நூலில் உண்டு.)

*தமிழின் முன்னோடிச் சிறுகதை ஆசிரியர். `குளத்தங்கரை அரசமரம்` என்ற அவரின் சிறுகதை, அரசமரமே பேசும் உத்தியில் எழுதப்பட்டது. *`மங்கையர்க்கரசியின் காதல், சந்திர குப்த சக்கரவர்த்தியின் சரித்திரம், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் பாலகாண்ட உரை` என அவர் தமிழுக்குச் செய்துள்ள பங்களிப்புகள் பலப்பல. திருக்குறளையும் குறுந்தொகையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

*சேரன்மாதேவியில் குருகுலக் கல்விக்கு வழிவகுத்தார். `பரத்வாசர் ஆசிரமம்` எனப் பெயரிட்டுக் கல்வி நிலையம் நடத்தினார். சமபந்தி போஜனத்தை அங்கு அவர் பின்பற்றவில்லை. `காலப் போக்கில் அது இயல்பாகும், இப்போது அப்படிச் செய்தால் உயர்சாதி மாணவர்கள் குருகுலத்தில் சேர மாட்டார்கள்` என அதற்கு அவர் காரணம் சொன்னார்.

தம்மளவில் தீண்டாமையை அவர் எதிர்த்ததோடு, தாம் எல்லாச் சாதியாரோடும் உணவுண்ணும் வழக்கத்தைப் பின்பற்றி வந்தார். மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த கனகலிங்கத்திற்குப் பூணோல் அணிவித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளித்தவர் வ.வே.சு. ஐயர்.

*44 ஆம் வயதில் 3.7.1925 ஆம் தேதியன்று காலமானார். பாபநாசம் சென்றார். அருவியில் குளிக்கப் போகும்போது அவரது மகளான சிறுமி சுபத்ரா தவறி விழ, தன் மகளைக் காப்பாற்றத் தானும் உடன் குதிக்க இருவரும் காலமானதாகச் சொல்லப்படுகிறது.

அங்கே தியானம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞர், அவர்கள் காலமானதைக் கண்ணெதிரே பார்த்து வாழ்வின் நிலையாமையை உணர்ந்ததாகவும் பின்னர் அந்த இளைஞர் துறவியானதாகவும் வரலாறு சொல்கிறது. அப்படித் துறவியி¡னவரே பின்னாளில் சித்பவானந்தர் என அழைக்கப்பட்ட திருப்பராய்த்துறைத் துறவி. (சி. சுப்பிரமணியத்தின் சிற்றப்பா.) வ.வே.சு. ஐயர் காலமானபோது அவருக்கு வயது 44 தான்.