மலர்தல்/மதுவந்தி


குளியலறையின்
மூடிய கதவைத் தாண்டி,
குழாய்நீர் நெகிழி வாளியில்
வீழ்கிற ஓசை தாண்டி,
குழந்தை அழும் குரல் கேட்டு
அரைகுறையாய்க் குளியல் முடித்து
அவசரமாய் ஓடி வந்தேன்.
எதற்கழுதாளெனத் தெரியாது.
எப்படி மாற்றுவதெனத் தெரியும்.
வேகமாய்க் காகிதமெடுத்துக்
கப்பலொன்று செய்து நீட்ட,
பிஞ்சுக் கைகள் நீண்டு வாங்குமுன்,
அழுகையொலி குறைந்து ,
முதலில் கண்கள் மலர,
பின் முகமெலாம் மலர,
விழி ததும்பும் கண்ணீரும்,
முகம் பூரா சிரிப்புமாய்,
உப்பு தூவிய சாக்லெட்டாய்
உள்ளம் கொள்ளை கொள்கிறாள்.
காகிதக் கிட்டங்கி திறந்து
கப்பல்களாய்ச் செய்து
குவிக்கத் தோன்றுகிறது இப்போ.

One Comment on “மலர்தல்/மதுவந்தி”

Comments are closed.