இனிக்கும் தமிழ் – 115/டி வி ராதாகிருஷ்ணன்

ராமாயணம் – காணாமலே காதல்

சிலரைக் கண்டதுமே..அவர்கள் மீது நமக்கு ஒரு அன்பு..நேசம் பெருகுகிறது.
அதே போன்றுதான் விபீஷனனுக்கும்.
அவனுக்கு ராமன் யார் என்று தெரியாது.ராமனைப் பற்றிக் கேள்விப் பட்டது கூட
கிடையாது.ஆனால்..அவன் மீது ஒரு நட்பு.
“நான் அவனை இதற்கு முன் பார்த்தது கிடையாது. அவனைப் பற்றி கேள்வி பட்டது
கூட கிடையாது. அவன் மேல் எனக்கு இவ்வளவு அன்பு பிறக்க என்ன காரணம்
என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. என் மனம் உருகுகிறது.
இந்த பிறவி என்ற நோய்க்கு அவன் பகைவன் போலும்” என்று விபீஷணன்
உருகுகிறான்.

பாடல்

‘முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.

பொருள்

‘முன்புறக் கண்டிலென் = முன்பு அவனைக் கண்டது இல்லை
கேள்வி முன்பு இலென் = அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் = அவன் மேல் அன்பு கொள்ளக் காரணம் கூட தெரியாது
என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிரும்
நெஞ்சு உருகுமேல் = நெஞ்சம் உருகுகிறது

அவன் = அவன்

புன் புறப் பிறவியின் = மீண்டும் மீண்டும் பிறக்கும் இந்த பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல. பிறவி என்ற பகையை அழித்து மீண்டும்
பிறக்காமல் செய்வான்.

அரக்கர் குலத்தில் பிறந்தவன் விபீஷணன். ராமன் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது.

இருந்தாலும் அவன் மேல் அன்பு பிறக்கிறது.

ஏன் ?

அதற்கு காரணம் அவனுக்கும் தெரியவில்லை.

விநோதாமாய் இல்லை ?

இந்த அன்புக்கு காரணம் என்ன ? இந்த அன்பை அவனுக்குள் தோன்ற வைத்தது எது ?

                       -